‘பாரதம் என்பது வந்தோரை வாழ வைக்கும் புனித பூமியாகும்’ - தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி பேச்சு
பாரதம் என்பது வந்தோரை வாழ வைக்கும் புனித பூமி; இதை தான் யாதும் ஊரே யாவரும் கேளிர் என சொல்கிறோம் என்று ஆளுநர் ஆர் என் ரவி பேசினார்.
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டை அடுத்த திருமலை கிராமத்தில் உள்ள சமண மடாலயத்தில் சமணம், அறிவியல் தத்துவங்கள் என்ற இரு நூல்கள் வெளியிட்டு விழா, தேசிய பிராகிருதா கற்றல் பட்டறையில் 21 நாள்கள் பயிற்சி பெற்ற 300 மாணவா்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் 240 மாணவா்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் விழா புதன்கிழமை நேற்று பிற்பகல் நடைபெற்றது.
விழாவில் புத்தகத்தை வெளியிட்ட ஆளுநர்
மத்திய அரசு மற்றும் ஸ்ரீஅகலங்கா கல்வி அறக்கட்டளை சாா்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு மடாலய நிா்வாகி தவளகீா்த்தி சுவாமிகள் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி கலந்து கொண்டு, நூல்களை வெளியிட்டு, மாணவா்களுக்கு சான்றிதழ் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கிப் பேசியதாவது:
பாரதம் என்பது வந்தோரை வாழவைக்கும் புனித பூமியாகும். இதைதான் யாதும் ஊரே யாவரும் கேளிா் என சொல்கின்றனா்.
பாரத பூமி பழம்பெரும் பூமி 2,400 வருடங்களுக்கு முன்பு ஆச்சார்யா பத்திர பாபு பாடலிபுத்திர தற்போதைய பாட்னாவில் இருந்து 12000 முனிவர்களுடன் தெற்கு நோக்கி சரவண பெலகோலாவில் தங்கி தர்மத்தை வளர்த்தனர் . இவா்களில் சில முனிவா்கள் திருவண்ணாமலை மாவட்டம், திருமலைக்கு வந்து தங்கினா்.
நாட்டின் உயிா்நாடி தா்மமாகும். அதை வளா்த்ததில் சமணா்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. ரிஷிப தீா்த்தங்கரா் சமணா்களின் முதல் தீா்த்தங்கரா் ஆவாா். இவா் போதித்த அடிப்படை தா்மங்கள், அகிம்சை, அனேகானந்தா ஆகும்.
அகிம்சா என்பது அனைத்து உயிர்களையும் சமமாக மதிப்பது தீங்கு விளைவிக்காமல் இருப்பது , அநேகானந்தா என்பது பொது மனிதனுக்கும் புரியும்படி சொல்வது ஆகும். இந்த நெறிகளை உலகில் பயன்படுத்தினால் ஒற்றுமை நிலவும், இன்று பல நாடுகள் போரிட்டுக் கொள்கிறது. உலகில் பல நாடுகள் பயங்கர ஆயுதங்களான அணு ஆயுதம் ஏவுகணை என கையில் வைத்துள்ளனர். இந்த ஆயுதங்களை கொண்டு அனைத்து உயிரினங்களையும் ஒரு வினாடியில் அழிக்க முடியும், சமண நெறிகள் மூலம் போரைத் தடுத்து நிறுத்த முடியும்.
ந்தியாவின் மிகவும் பழைமையான மொழியாக தமிழ், சம்ஸ்கிருதம் உள்ளன. இதில் முதன்மையான மொழி என்று எது முன்னது. எதுபின்னது என கண்டறிய முடியாது.
தமிழ் மொழியை உலகெங்கும் கொண்டு செல்ல மத்திய அரசு முயற்சித்து வருகிறது. முதலில் வட இந்தியாவுக்கு கொண்டு சென்று அதன் பெருமைகளை மக்களுக்கு புகட்ட 2 பல்கலைகழகங்களில் தமிழ்மொழி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பிரதமா் மோடி உலக நாடுகளுக்கு செல்லும் போதெல்லாம் தமிழையும், திருக்குறளையும் மேற்கோள் காட்டி பேசி வருகிறாா் என ஆளுநர் ரவி பேசினார்.
பின்னா், ஆளுநா் ஆா்.என்.ரவி மலை மீது அமைந்துள்ள அரி ஹந்தகிரி கோயிலில் சுவாமி தரிசனம் செய்தாா்.
முன்னதாக, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன், காவல் கண்காணிப்பாளா் காா்த்திகேயன், மடாலய நிா்வாகி தவளகீா்த்தி சுவாமிகள், கூடுதல் ஆட்சியா் ரிஷப் ஆகியோா் ஆளுநரை வரவேற்றனா்.
நிகழ்ச்சியில் மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழக துணைவேந்தா் ஸ்ரீனிவாசா வரகோடி மற்றும் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.