படவேட்டில் பற்றி எரியும் குப்பை கழிவுகள்: நச்சுப் புகையால் பக்தர்கள் அவதி

கமண்டல நதிக்கரையில் குப்பை கழிவுகள் எரிக்கப்படுவதால் பொதுமக்களும், பக்தர்களும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

Update: 2023-08-03 02:17 GMT

எரிக்கப்படும் குப்பைகள்.

தமிழகத்தில் உள்ள அம்மன் கோயில்களில் பிரசித்திப்பெற்றது படவேடு ரேணுகாம்பாள் கோயில் திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசல் (வேலூர் நெடுஞ்சாலை) அருகே அமைந்துள்ளது.

இக்கோவிலுக்கு திருவண்ணாமலையை சுற்றியுள்ள ஊர்கள் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வருகை தந்து அம்பாளை தரிசனம் செய்வர்.

இக்கோயிலில் ஆடி மாத திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும். அதன்படி தற்போது ரேணுகாம்பாள் கோவிலில் கடந்த 15 நாட்களாக ஆடி மாத சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக அம்மனுக்கு வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அன்னதானங்கள் நடைபெற்று வருகின்றன.

படவேடு ரேணுகாம்பாள் கோவிலுக்கு மக்களின் வருகை அதிக அளவில் உள்ள நிலவியில் கமண்டல நதிக்கரையில் குப்பை கழிவுகள் கொட்டி தீயிட்டு எரிக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படுவதால் நச்சுப் புகை வெளியேறி சுவாசப் பிரச்சினை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து பக்தர்கள் கூறும்போது படவேடு ரேணுகாம்பாள் கோயிலில் ஆடி மாத திருவிழா ஒரு மாதம் நடைபெறும் திருவிழா தற்போது 15 நாட்களாக நடைபெற்று வருகிறது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அம்மனை வழிபடுகின்றனர். பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளதால் குப்பை கழிவுகளும் பிளாஸ்டிக் பொருட்களும் அதிக அளவில் சேருகிறது.

மேலும் உணவகங்கள் திருமண மண்டபங்கள் அன்னதானங்கள் இவற்றில் இருந்து வரும் உணவு கழிவுகள் வாழை இலைகள் கொட்டப்படுகின்றன .மேலும் இவற்றுடன் பிளாஸ்டிக் கழிவுகளையும் சேர்த்து கொட்டுகின்றனர். மேலும் அம்மன் கோயிலில் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக ஆடு மற்றும் கோழிகள் பலியிடப்படுகின்றன.

அந்த கழிவுகளும், கடை வீதியில் உள்ள இறைச்சி கடைகளில் இருந்து இறைச்சி கழிவுகளையும் கமெண்டல நதியில் கொட்டி வருகின்றனர். இதனால் நதியும் மாசடைந்து வருகிறது. இந்த மாசடைந்த நதியில் தான் பக்தர்கள் நீராடி வருகின்றனர்.

இந்த குப்பைகள் எரிக்கப்படுவதால் நச்சுப்புகை வெளியேறி பக்தர்களுக்கும் கிராம மக்களுக்கும் சுவாச பிரச்சனை ஏற்படுத்தி வருகிறது. மேலும் அவ்வழியாக செல்லும் வயதானவர்கள் ,குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்

ஆடித்திருவிழாவின் போது கட்டண வசூலில் கவனம் செலுத்தும் ஊராட்சி நிர்வாகம், உள்ளாட்சி நிர்வாகம், இந்து சமய அறநிலைத்துறையினர் குப்பைகளை அகற்றுவதில் கவனம் செலுத்துவதில்லை.

மாவட்ட நிர்வாகமும் ,வருவாய் துறையினரும் மற்றும் படைவீடு ஊராட்சியும் இணைந்து குப்பைகளை உடனுக்குடன் அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News