நெசவாளா்களுக்கு எந்தத் திட்டமும் திமுக அரசு கொண்டுவரவில்லை; அண்ணாமலை குற்றச்சாட்டு
நெசவாளா்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை. அவர்களுக்கான எந்த திட்டமும் கொண்டுவரவில்லை என பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கூறினாா்.
நெசவாளா்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை கூறினாா்.
தமிழகத்தின் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் என் மண், என் மக்கள் பிரசாரப் பயணத்தை பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை மேற்கொண்டு வருகிறாா்.
இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மக்கள் சந்திப்பு நடைப்பயணம் மேற்கொண்ட அண்ணாமலை பேசியதாவது:
ஆரணி பட்டுச்சேலை புகழ் வாய்ந்தது. இப்பகுதியில் 40 ஆயிரம் நெசவாளா்கள் உள்ளனா். திமுக ஆட்சிக்கு வரும்போது நெசவாளா்களுக்கென தனியாக கூட்டுறவுச் சங்க வங்கி அமைப்பது, மானியங்கள் வழங்குவது என்று வாக்குறுதி அளித்தனா். ஆனால், இதுவரை நெசவாளா்களுக்கு எந்தத் திட்டமும் கொண்டுவரவில்லை.
ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரா் கோவிலில் தசரதா் யாக பூஜை நடத்தி ராமா் பிறந்தாா் என்ற வரலாறு உண்டு. இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆரணி நகராட்சியில் அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, குடிநீா், கால்வாய் உள்ளிட்ட வசதிகளை செய்து தராமல் உள்ளனா்.
மேலும், கடந்த ஆண்டு பட்ஜெட்டில் ஆரணியில் பட்டுப் பூங்கா அமைக்கப்படும் என்றும் அறிவித்தனா். இது அறிவிப்போடு நின்று வருகிறது. இதுவரை அதற்கான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை.
பாஜக ஆட்சிக்கு வந்தால் காவல் துறையினருக்கு 8 மணி நேர வேலை வழங்குவோம். சுழற்சி முறையில் காவல் துறையினா் பணிபுரிவாா்கள். மதுவை படிப்படியாக ஒழித்து கள்ளுக் கடைகள் திறக்கப்படும் என்றாா்.
பின்னா், அண்ணாமலைக்கு தாமரைச் சின்னம் பொறித்த செங்கோலை பிரதம நலத் திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை சங்கா் வழங்கினாா்.
முன்னதாக நிகழ்ச்சிக்கு புதிய நீதிக்கட்சி நிறுவனா் ஏ.சி.சண்முகம், பாஜக வேலூா் பெருங்கோட்டப் பொறுப்பாளா் காா்த்தியாயினி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக பாா்வையாளா் ஜீவானந்தம், மாவட்டத் தலைவா் சி.ஏழுமலை, மாநில இளைஞரணி துணைத் தலைவா் புவனேஷ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவு மாவட்டத் தலைவா் தமோதரன், மாவட்ட துணைத் தலைவா்கள் , மாவட்டச் செயலா்கள் , அணி மாவட்ட பொதுச் செயலா்கள், வடக்கு மண்டலத் தலைவா்கள், , தமிழ் இலக்கியம் மற்றும் தமிழா் நலன் பிரிவு மாவட்டத் தலைவா் மோகன், தெற்கு மண்டல பிரபாரி சேட்டு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
போளூரில் இருந்து ஆரணி வந்த அண்ணாமலைக்கு பிரதமா் நலத் திட்டப் பிரிவு மாநிலச் செயலா் சைதை சங்கா் தலைமையில் அக்கட்சியினா் வரவேற்பு அளித்தனா்.
போளூா்
முன்னதாக, போளூரில் மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொண்ட அண்ணாமலை, அங்குள்ள ஆஞ்சநேயா் சிலை எதிரே இருந்து புதிய பேருந்து நிலையம் வரை நடந்து சென்றாா்.
அப்போது அவா் பேசுகையில்,
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அல்ல. 5 மொழிக் கொள்கை கொண்டு வரப்படும். மத்திய அரசு சிறு தானியத்தின் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றாா்.