விடுதியில் தங்கி இருந்த முதியவர் உயிரிழப்பு: போலீஸார் விசாரணை
போளூரில் விடுதியில் தங்கி இருந்த முதியவர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்;
காஞ்சீபுரம் அடுத்த சிறுகாவேரிபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 72), ஒய்வு பெற்ற மின்வாரிய ஊழியர். இவர் குடும்பத்தகராறு காரணமாக, குடும்பத்தை விட்டு பிரிந்து போளூரில் உள்ள ஒரு விடுதியில் மாத வாடகையில் அறை எடுத்து கடந்த 7 மாதமாக தங்கி இருந்தார்.
இந்த நிலையில் அந்த அறையிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பக்கத்து அறையிலிருந்தவர்கள் புகார் செய்தனா். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் மலைமாறன் போளூர் போலீசில் புகார் செய்தார்.அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் அங்கு சென்று அறையை திறந்து பார்த்த போது, ராஜ்குமார் இறந்து கிடந்தது தெரியவந்தது.அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது மாரடைப்பால் இறந்தாரா? என்று தெரிய வில்லை. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போளுர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.