சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில் குவியும் நெல் மூட்டைகள்

சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில், நெல் மூட்டைகள் குவிந்து வருவதால், 31 ம் தேதி வரை விற்பனைக்கு மூட்டைகளை கொண்டு வர வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-03-29 01:41 GMT

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நிரம்பி உள்ள நெல் மூட்டைகள். 

திருவண்ணாமலை: சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 30,000 நெல் மூட்டைகள் குவிந்துள்ளதால், வரும் 31-ம் தேதி வரை கொள்முதல் செய்யப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம் உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்து நெல் மூட்டைகளை விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வருகின்றனர். ரூ.150 வரை கூடுதல் விலை கிடைப்பதால், நெல் மூட்டைகளின் வரத்து தினசரி அதிகரித்து வருகிறது. தினசரி 6 ஆயிரம் முதல் 7 ஆயிரம் வரை நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.

ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் உள்ள 6 கிடங்குகளிலும் சுமார் 30 ஆயிரம் நெல் மூட்டைகள் நிரம்பி உள்ளன. இதன் எதிரொலியாக, விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யும் பணி, வரும் 31-ம் தேதி நிறுத்தி வைக்கப்படுவதாக கண்காணிப்பாளர் தினேஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் சேத்துப்பட்டு ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஆய்வு செய்த செயலாளர் சந்திரசேகர் கூறியதாவது,

தற்போது கார்கால பருவம் அறுவடைக்கு வந்துள்ளது.  திருவண்ணாமலை மாவட்டத்தில் சேத்துப்பட்டு போளூர் மார்க்கெட் கமிட்டியில் நெல் வரத்து அதிகமாக உள்ளது.  இங்கு மூட்டைக்கு ரூபாய் 100 முதல் 150 வரை அதிகமாக கிடைப்பதால் பல்வேறு பகுதியிலிருந்து விவசாயிகள் தங்களுடைய நெல் மூட்டைகளை கொண்டு வருகின்றனர் .

விவசாயிகளுக்கு சேர வேண்டிய பண பட்டுவாடா இணைய வழியில் வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது.  மேலும் வியாபாரிகளின் கொள்முதல் மூட்டைகள் வெளியேறும் போது விவசாயிகளின் மூட்டைகளுக்கு இங்கே உடனுக்குடன் அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் குடோன்கள் அனைத்தும் நிரம்பி வழிவதால் நிர்வாகம் 31ம் தேதி வரை நெல் மூட்டைகளை கொண்டு வர வேண்டாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

Similar News