சிலிண்டர் வெடித்து குடிசை வீடு தரைமட்டம்
போளூர் அருகே சமையல் செய்து கொண்டிருந்தபோது சிலிண்டர் வெடித்ததால், குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து தரைமட்டமானது
போளூரை அடுத்த ஆத்துவாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பச்சையம்மாள், தனது வீட்டில், சமையல் செய்து கொண்டிருந்தபோது எதிர்பாராவிதமாக கியாஸ் சிலிண்டர் வெடித்தது.
இதில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலாயின. வீட்டின் பின்புறம் வீடு கட்டுவதற்காக சேமித்து வைத்திருந்த பணம் மற்றும் ஆவணங்கள் தீயில் கருகியது.அதிர்ஷ்ட வசமாக பச்சையம்மாள் உயிர் தப்பினார். வீட்டுக்குள் இருந்த அவரது உறவினர் மணிமாறனுக்கு பலத்த தீக்காயங்கள் ஏற்பட்டது. அவரை போளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
தகவல் அறிந்ததும் போளூர் தீயணைப்பு வீரர்கள் நிலைய அலுவலர் ராஜேந்திரன் தலைமையில் விரைந்து சென்று தீயை அணைத்தனர். வட்டாட்சியர் சண்முகம், மண்டல துணை வட்டாட்சியர் சிவலிங்கம் ஆகியோர் நேரில் சென்று பச்சையம்மாளுக்கு ஆறுதல் கூறி, அரசு நிவாரணமாக அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், வேட்டி, சேலைகள் வழங்கினர். மேலும் ரூ.5 ஆயிரம் அவரது வங்கி கணக்கில் வரவு வைத்தனர். வருவாய் ஆய்வாளர் அறிவழகன், கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி ஆகியோர் உடனிருந்தனர்.