கூட்டுறவு வங்கி கொள்ளை முயற்சி: குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு பாராட்டு

போளூர் அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி, குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த போலீசாருக்கு டிஜிபி பாராட்டு தெரிவித்தார்.

Update: 2024-03-03 02:27 GMT

தனிப்படை காவலர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய டிஜிபி.

போளூர் அருகே கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்த போலீசாருக்கு டிஜிபி பாராட்டு தெரிவித்தார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மொடையூர் கிராமத்தில் உள்ள கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த மாதம் கொள்ளை முயற்சி நடந்தது..

மொடையூர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் கடந்த பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி சிலிண்டர் வெல்டிங் பொருட்கள் மற்றும் சில கருவிகள் இருப்பதை பார்த்தார். மேலும் தனது நிலத்துக்கு அருகே இயங்கி வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின் பின்பக்க ஜன்னல் திறந்து இருப்பதையும் பார்த்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ் இது குறித்து கூட்டுறவு வங்கி உதவி செயலர் வேலுமணிக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக கூட்டுறவு சங்க செயலர் வேலுமணி காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

அப்போது விரைந்து வந்த காவல்துறையினர் கூட்டுறவு சங்கத்தின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்தனர். மேலும் ரூபாய் எட்டு கோடி மதிப்பிலான நகைகள், பணம் இருந்த பாதுகாப்பு பெட்டகத்தின் கதவுகள் வெல்டிங் மூலம் சேதப்படுத்தப்பட்டுள்ளதையும் கடன் சங்கத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களும் சேதப்பட்டிருந்ததையும் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த கொள்ளை முயற்சி சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க ஆரணி வட்ட காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை செய்து அதே பகுதியில் காவலாளியாக பணியாற்றிக் கொண்டிருந்த கரண் மற்றும் மும்பையில் பதுகி இருந்த சாகிப், முகமது ஷேக், அருண் சேக் ஆகியோரை பிப்ரவரி 19 ஆம் தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கில் திறமையாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையை சேர்ந்த ஆரணி காவல் ஆய்வாளர் விநாயகமூர்த்தி, செங்கம் உதவி ஆய்வாளர் நசுருதீன், காவலர்கள் கோபி வேட்டவலம், பழனிவேல் வடவணக்கம்பாடி, குமார் கலசப்பாக்கம், சரவணன் ஜமுனாமருதூ,ர் திருவண்ணாமலை நகர குற்றப்பிரிவு காவலர் அறிவழகன் ஆகியோரை தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிலால் பாராட்டி தலா ஆயிரம் ரூபாய் வெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

மேலும் இந்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பாராட்டு தெரிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Tags:    

Similar News