ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர்கள் விடுதியில் ஆட்சியர் திடீர் ஆய்வு

சேத்துப்பட்டு ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர்கள் விடுதியில் ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-07-12 12:37 GMT

ஆதிதிராவிடர் மாணவர் விடுதியில் உணவுக்கூடத்தினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஆதி திராவிடர் நலத்துறை மாணவர்கள் விடுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பாஸ்கர பாண்டியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவின் தரம் குறித்தும், உணவு சுகாதாரமான முறையில் வழங்கப்படுகிறதா என்பதை கேட்டறிந்தார்.

மாணவர்களுக்கு அத்தியாவசிய தேவைகளான மருத்துவ முதலுதவி மருத்துவ பெட்டகத்தினை பார்வையிட்டு, காலாவதி ஆகாத மருந்துகள் இருப்பு இருக்கிறதா என்பதை ஆய்வு செய்து, மாணவர்களுக்காக வைக்கப்பட்ட புகார் பெட்டி சரி வர பராமரிக்கப்படாமல் இருப்பதை குறித்தும், சமையல் கூடங்களை சுத்தமாக தூய்மைப்படுத்த அறிவுறுத்தினார்.

மேலும் தினம்தோறும் சுத்தப்படுத்தும் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பை என வழங்குவது குறித்து மாணவர்களிடத்திலே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஒருமுறை பயன்படுத்தும் நெகிழியினை தவிர்த்து பூமி மாசு படுவதை கட்டுப்படுத்த எதிர்கால தலைமுறையினர்களான மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்துமாறு கூறினார், மேலும் விடுதி காப்பாளர்கள் மாணவர்களின் கல்வி குறித்து கண்காணித்து அவர்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் வகுப்புகள் நடத்த இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து ஆட்சியர் கூறுகையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டணியில் மாவட்ட அளவிலான ஆதிதிராவிடர் நலத்திற்கு கூட்டம் மூன்று மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும். இக்கூட்டத்தில் மூன்று விதமான அலுவலர்களிடம் கருத்துக்கள் குறித்து ஆய்வு செய்யப்படும். நல குழு உறுப்பினர்களுடன் கருத்துக்கள் கேட்கப்பட்டு நடைமுறைப்படுத்துவதற்கு மனுக்கள் மூலம் தெரிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படும்.

மாவட்ட விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு மூலம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரத்தையும் நல திட்டங்கள் முழுவதுமாக அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு அத்திட்டங்கள் வாயிலாக பயன் பெற்று அவர்களது தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கரன் ஒன்றியம் அதிகாரிகளிடம் கூறினார்

ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சாந்தி, பழங்குடியினர் நல திட்ட அலுவலர் கலைச்செல்வி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) ஏழுமலை மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Similar News