சேத்துப்பட்டு அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் திடீர் ஆய்வு: கோபமடைந்த கலெக்டர்
சேத்துப்பட்டு அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் பஞ்சாயத்து யூனியன் விநாயகபுரம் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் நீர் தேக்க தொட்டி, செய்யாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் பாலம் ஆகிய பணிகளை கலெக்டர் முருகேஷ் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார்.
பின்னர் விநாயகபுரத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மையம் நடுநிலைப் பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
கோபமடைந்த கலெக்டர்
மேலும் ஜல் சக்தி திட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம் எந்த நிலையில் உள்ளது என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கலெக்டர் கேள்வி எழுப்பினார்.
அதற்கு அதிகாரிகள் இந்த பணியை பஞ்சாயத்து தலைவர் செய்து வருவதாக கூறினர் . உடனே பஞ்சாயத்து தலைவர் சந்துருவை அழைத்து குடிநீர் இணைப்பு வேலைகளை முடித்து விட்டீர்களா என கேட்டதற்கு, இன்னும் வேலையை தொடங்கவில்லை என அவர் மெத்தனமாக பதில் அளித்தார். இதனால் கோபமடைந்த கலெக்டர் , சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் ஊராட்சி செயலாளரை அழைத்து பணிகளை நேரில் சென்று பார்ப்பதில்லையா என கடிந்து பேசினார்.
குடிநீர் வழங்கும் பணிக்கு மூன்று மாதத்திற்கு முன்பு ஒர்க் ஆர்டர் வழங்கியும் இந்த பணி தொடங்கப்படவில்லை, ஆகவே இந்த பணியை ரத்து செய்து வேறு ஒருவருக்கு கொடுத்து விரைவில் பணியை முடியுங்கள் என கூறிவிட்டு அங்கிருந்து கலெக்டர் புறப்பட்டு சென்றார்.
பின்னர் விநாயகபுரத்திலிருந்து பெரிய கொளப்பலூர் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றார் . அப்போது டாக்டர் சிவரஞ்சனி மற்றும் ஒரு செவிலியர் பணியில் இருந்தனர். வட்டார மருத்துவ அலுவலர் எங்கே ? என கலெக்டர் கேட்டபோது, விடுப்பில் சென்றுள்ளதாகவும் கடந்த 10 நாட்களாக வட்டார மருத்துவ அலுவலர் அருண்குமார் பணிக்கு வரவில்லை என்று ஊழியர்கள் கூறினர்.
இங்கு செவிலியர்கள் எத்தனை பேர் உள்ளனர்? என்று கலெக்டர் கேட்டதற்கு , மூன்று பேர் பணியில் உள்ளோம் என கூறினர். ஆனால் ஒரு செவிலியர் மட்டும் பணியில் இருந்தார்.
மற்றவர்கள் பணியில் இல்லாதது கண்டு கலெக்டர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பற்றாக்குறை குறித்து செய்யாறு சுகாதார பணிகள் துணை இயக்குனர் சதீஷ் இடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
மேலும் அங்கிருந்த பொதுமக்கள், டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் யாரும் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு வருவதில்லை, குறிப்பாக இரவு நேரத்தில் ஒரு டாக்டர் கூட இருப்பதில்லை, கிராமப்புற மக்கள் பிரசவத்திற்கு வந்தால் ரூபாய் 500 பணம் கேட்கிறார்கள் என குற்றம் சாட்டினர்.
மேலும் மருத்துவமனை அலுவலகத்தில் சுற்றி பார்வையிட்ட கலெக்டர், அப்போது மருத்துவமனை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் என ஊழியர்களிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த ஆய்வின்போது செய்யாறு சப் கலெக்டர் அனாமிகா, செய்யார் ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் சுரேஷ்குமார், யூனியன் சேர்மன் இந்திரா மற்றும் யூனியன் பொறியாளர்கள், வட்டார சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.