நிலத்தடி நீர்மட்டம் உயர பண்ணை குட்டை அமைக்க ஆட்சியர்அறிவுறுத்தல்

நிலத்தடி நீர்மட்டம் உயர விவசாயிகள் பண்ணை குட்டை அமைப்பது மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளை பாதுகாக்க வேண்டும் என ஆட்சியர் கலெக்டர் அறிவுரை

Update: 2024-06-14 03:43 GMT

நீர் பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்ட கூட்டத்தினை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் உயர விவசாயிகள் பண்ணை குட்டை மற்றும் குளம் பாதுகாத்தல் என நீர் பிடிப்பு பகுதிகளை பாதுகாக்க வேண்டும் என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் தமிழ்நாடு நீா்ப்பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் நிலை -111, 2021-2022 இன் கீழ், செய்யாறு உப வடிநிலப் பகுதியில் மாவட்ட அளவிலான வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில், உழவா் உற்பத்தியாளா் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைவோருக்கான இடைமுகப் பணிமனை கூட்டம் நடைபெற்றது.

போளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த இடைமுகப் பணிமனை கூட்டத்துக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா்.

வேளாண்மை இணை இயக்குநா் ஹரக்குமாா், மண்டல இணை இயக்குநா் (கால்நடை பராமரிப்புத் துறை)செய்த்தூன், வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வா் மாணிக்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வேளாண்மை துணை இயக்குநா் (வேளாண் வணிகம்) ஷெமிலாஜெயந்தி அனைவரையும் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கூறுகையில்,  திருவண்ணாமலை மாவட்டத்தில் நிலத்தடிநீா் மட்டம் உயர விவசாயிள் பண்ணைக்குட்டை அமைத்தல், குளம் பாதுகாத்தல் என நீா்பிடிப்புப் பகுதிகளை பாதுகாக்கவேண்டும்,

தண்ணீரை சேமிக்க பழகவேண்டும், தண்ணீரை வீணாக்கக்கூடாது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 0.5 சதவீதம் தான் நிலத்தடி நீா்மட்டத்தில் நன்னீா் உள்ளது.

இயற்கை விவசாயம் செய்ய வேண்டும், கிராமப்புற மக்கள் நகர மக்களைப் போன்று வாழப் பழகிவருவதால் மரங்கள் அழிக்கப்பட்டு, இயற்கையை இழந்து வருகின்றனா்.

எனவே, விவசாயிகள் இயற்கை விவசாயம் செய்து, மரங்களை பாதுகாத்து, காலியாக உள்ள இடங்களிலும், வீட்டுக்கு வீடு மரங்களை நட்டுவளா்க்க வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் வேளாண்மை துணை இயக்குநா் உமாபதி, நீா்வளத் துறை செயற்பொறியாளா் அறிவழகன், வேளாண் பொறியியல் செயற்பொறியாளா் பஞ்சாபகேசன், சிறுதானிய பேராசிரியா் வைத்தியலிங்கம் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கான அரசின் திட்டம் மற்றும் செயல்பாடுகள் குறித்துப் பேசினா்.

கூட்டத்தில் வேளாண்மை அலுவலா் மோனகாசரிதா, உதவி வேளாண்மை அலுவலா் சீனுவாசன் மற்றும் போளூா், சேத்துப்பட்டு என சுற்றுப்புறப் பகுதிகளில் இருந்து விவசாயிகள், தொழில்முனைவோா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News