மத்திய அரசின் திட்டங்களில் நடைபெறும் ஊழலை கண்டித்து பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் திட்டங்களில் நடைபெறும் ஊழலை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திகள்:
மத்திய அரசின் திட்டங்களில் நடைபெறும் ஊழலை கண்டித்து பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்தில் மத்திய அரசின் திட்டங்களில் நடைபெறும் ஊழலை கண்டித்து ஒன்றிய பா.ஜ.க. சார்பில் தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட பார்வையாளர் தசரதன் கண்டன உரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில உள்ளாட்சி மேம்பாட்டு செயலாளர் அறவாழி, மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜ்குமார், சேகர், மாவட்ட பொது செயலாளர்கள் சதீஷ்குமார், ரமேஷ், முருகன், மாவட்ட செயலாளர்கள், கிருஷ்ணமூர்த்தி, குமரன், ரேணுகா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திண்டிவனம் நகரி ரயில் பாதை திட்டத்திற்கு நிலம் தரும் விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க கோரிக்கை:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு துணை ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் மனு கொடுக்கும் போராட்டம் நடத்தினர் நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் பலராமன் மாவட்ட பொருளாளர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் திண்டிவனம் நகரி ரயில் பாதை திட்டத்திற்கு நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்க வேண்டும் வழிகாட்டுதல் மதிப்பை பரிசீலனை செய்து உரிய இழப்பீடு தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் மனு கொடுக்கும் இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் துணை ஆட்சியர் அனாமிகாவிடம் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்:
கண்ணமங்கலம் அருகே அனந்தபுரம் ஊராட்சியில் புதூர் மாரியம்மன் கோவில் அருகே இன்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் 100 நாள் தொழிலாளர்களுக்கு தடையின்றி பணி வழங்க கோரியும், பணித்தள பொறுப்பாளர்களை மாற்றக்கோரியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
போளூர் தாலுகா விவசாயிகள் சங்க தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். கிளை தலைவர் நதியா, செயலாளர் பச்சியம்மாள், பொருளாளர் சுமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுகுறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, போளூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பாபு, ஊராட்சி தலைவர் வளர்மதி, கிராம நிர்வாக அலுவலர் மயிலரசன், சந்தவாசல் வருவாய் ஆய்வாளர் சுரேஷ் ஆகியோர் விரைந்து வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது ஊராட்சி மன்ற தலைவர் வளர்மதி, விரைவில் பணித்தளப்பொறுப்பாளர்கள் மாற்றம் செய்யப்படுவர், வருகிற 30-ம் தேதி ஊராட்சியில் உள்ள 650 நூறு நாள் திட்ட பணியாளர்களுக்கு பணி வழங்கவும் ஒப்புதல் கடிதம் வழங்கினார். அதன்பேரில் அவர்கள் ஆர்ப்பாட்டத்தை முடித்துக் கொண்டனர்.