வனத்துறை பள்ளியில், எல்.இ.டி. டி.வி.கள் திருடியவர் கைது

ஜமுனாமரத்தூர் வனத்துறை பள்ளியில், எல்.இ.டி. டி.வி.கள் திருடியவர் கைது செய்யப்பட்டார். மேலும், தப்பி ஓடிய 2 பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-05-11 11:28 GMT

சப் இன்ஸ்பெக்டருக்கு வெகுமதி வழங்கி பாராட்டிய கூடுதல் டிஜிபி சங்கர் , உடன் திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன்

திருவண்ணாமலை மாவட்ட கிரைம் செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் போலீசார் போலீஸ் நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் போலீசாரை கண்டதும் திரும்பி சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை துரத்தி சென்றனர். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த 3 எல்.இ.டி. டி.வி.க்களை கீழே போட்டு விட்டு 2 பேர் காட்டு பாதை வழியாக ஓடினர். மற்றொருவர் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.

இதனையடுத்து தப்பி ஓடிய 2 பேரை தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன் துரத்தி சென்று ஒருவரை மடக்கி பிடித்தார். மற்றொரு ஓடிவிட்டார். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில், ஜமுனாமரத்தூர் மேல்சிலம்படி கிராமத்தில் உள்ள பலாக்கனூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார்  என்பது தெரியவந்தது.

மேலும் அவர் மற்றும் தப்பியோடிய 2 பேரும் இணைந்து ஜமுனாமரத்தூர் வனத்துறை மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் அறையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 3 எல்.இ.டி. டி.வி.க்களை திருடியது தெரியவந்தது.

பின்னர் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடி மற்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திருட்டில் ஈடுபட்டவரை துரத்தி சென்று மடக்கி பிடித்த சப்-இன்ஸ்பெக்டர் செங்குட்டுவனை சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சங்கர் வாழ்த்தி வெகுமதி அளித்து பாராட்டினார்.

சாலை மறியலில் ஈடுபட்ட 63 பேர் மீது வழக்கு

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த சத்தியவாடி கிராம காட்டு காலனி பகுதியில் உள்ள சுமார் 3 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை ஒருவர் சொந்தம் கொண்டுவதை கண்டித்து வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து வந்தவாசி சென்னாவரம் கிராம நிர்வாக அலுவலர் தீர்த்தகிரி தெற்கு காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மறியலில் ஈடுபட்ட 63 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போளூர் அருகே கஞ்சா கடத்திய 2 பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் புனிதா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தியதில், போளூர் அருகே உள்ள வெள்ளூர் கிராமத்தை சேர்ந்த இளங்கோவன் மகன் அஜித்குமார் மற்றும் 19 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

அவர்களை சோதனை செய்த போது கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து அரைக்கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

Similar News