போளூர் அருகே ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடர்பாக உதவி ஆட்சியர் ஆய்வு
போளூர் அருகே எட்டிவாடி ரயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்க கட்டுமான பணிக்கு தேவைப்படும் பரப்பளவு குறித்து கள ஆய்வு மேற்கொண்ட உதவி ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் போளூர் - வேலூர் சாலையில் எட்டிவாடி ரயில்வே கேட் உள்ளது. அவ்வழியாக ரயில்கள் செல்லும் போது நீண்ட நேரம் ரயில்வே கேட் மூடப்படுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் ரயில்வே கேட் பகுதியில் மேம் பாலம் கட்டுவதற்கான திட்ட வடிவமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாலம் அமையும் இடம் வனத்துறைக்கு சொந்தமான பகுதியாக இருப்பதால் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு நில வகை மாற்றம் செய்து தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக ஆய்வு பணி மேற்கொண்டு அறிக்கை அளிக்கும்படி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வருவாய் துறையினருக்கு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
அதன்பேரில் ஆரணி உதவி ஆட்சியர் கவிதா, போளூர் தாசில்தார் சண்முகம், மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் சாலையின் இருபுறமும் கட்டுமான பணிக்கு தேவைப்படும் பரப்பளவு குறித்து கள ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வறிக்கை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்கப்படும் என உதவி ஆட்சியர் தெரிவித்தார்