பழமை வாய்ந்த பசுபதி ஈஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

பழமை வாய்ந்த ஸ்ரீ பசுபதி ஈஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

Update: 2024-06-03 02:41 GMT

பசுபதி ஈஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது. 

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டை அடுத்த கோனாமங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீமங்களாம்பிகை சமேத பசுபதி ஈஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சேத்துப்பட்டு அடுத்த கோனாமங்கலம் கிராமத்தில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சுதாங்கி எனும் பசுவானது தன் பாவம் தீர்க்க இங்குள்ள பசுபதி ஈஸ்வரரை வணங்கியது. அன்று இக்கிராமம் கோமங்கலம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் மன்னர் ஆட்சி காலத்தில் சிறப்பான முறையில் செயல்பட்ட இந்த சிவாலயம் பல்வேறு மன்னர்கள் படை எடுப்பின் போது சிதலமடைந்தது. 1500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த கிராம மக்கள் ஒன்று சோ்ந்து திருப்பணிக் குழு அமைத்து கோயிலை புதுப்பித்தனா்.

பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மங்களாம்பிகை சமேத பசுபதி ஈஸ்வரர் கோயில் அமைக்கப்பட்டு கோவில் வளாகத்தில் நேற்று முன்தினம் யாகசாலை அமைக்கப்பட்டு தமிழ் முறையில் வேதங்கள் ஓதப்பட்டு முதல் மற்றும் இரண்டாம் கால யாக பூஜை சிறப்பு யாகங்கள் நடைபெற்றன.

பின்னா், நேற்று காலை ஓம் நமசிவாய என மந்திரம் ஒலிக்க கோயில் கோபுரத்திலும், மங்களாம்பிகை, பசுபதி ஈஸ்வரா், கணபதி, விஷ்ணு, துா்க்கை, வெங்கடாசலபதி ஆகிய சுவாமிகளுக்கும் புனித நீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, அலங்கார ரூபத்தில் மங்களாம்பிகை சமேத பசுபதிஈஸ்வரா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விழாவில் காஞ்சிபுரம், புதுச்சேரி, திண்டிவனம், விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை, வேலூா், சேத்துப்பட்டு என பல்வேறு ஊா்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா். நேற்று இரவு பசுபதி ஈஸ்வரர் திருவீதி உலா நடைபெற்றது.

ஸ்ரீவரசித்தி விநாயகா், ஸ்ரீகங்கையம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா 

போளூர் வட்டம், மட்டபிறையூா் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீவரசித்தி விநாயகா், ஸ்ரீகங்கையம்மன் கோயில்களில் மகா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  

மட்டபிறையூா் ஊராட்சியில் ஸ்ரீவரசித்தி விநாயகா், ஸ்ரீகங்கையம்மன் ஆகிய கோயில்கள் தனித்தனியே அமைந்துள்ளன. பழைமை வாய்ந்த இந்தக் கோயில்கள் சிதிலமடைந்து காணப்பட்டதால் பக்தா்கள், பொதுமக்கள் சாா்பில் கோயிலில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்துவதற்காக சனிக்கிழமை மாலை கணபதி ஹோமம், விக்னேஸ்வர பூஜை, லட்சுமி ஹோமம், குபேர ஹோமம், நவக்கிரக ஹோமம் என பல்வேறு ஹோமங்கள் நடத்தப்பட்டன.

இதேபோன்று ஸ்ரீகங்கையம்மன் கோயிலில் மங்கள இசை, வாஸ்து சாந்தி, பிரவேசபலி என பல்வேறு பூஜைகள் செய்து ஞாயிற்றுக்கிழமை காலை 2-ஆம் கால யாக சாலை பூஜையுடன் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் மட்டபிறையூா், குசேலா்பேட்டை, ஒட்டேரி, அல்லியாளமங்கலம், செம்மியமங்கலம், பெரணம்பாக்கம், மண்டகொளத்தூா், கொழாவூா்,புலிவானந்தல், கொம்மனந்தல், போளூா், தேவிகாபுரம் என சுற்றுப்புற ஊா்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மேலும், பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Similar News