மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த டிரைவர் போக்சோ சட்டத்தில் கைது
மைனர் பெண்ணை கடத்தி திருமணம் செய்த டிரைவரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.;
திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த சேங்கபுத்தேரி கிராமத்தை சேர்ந்த 17 வயது இளம்பெண் 12-ம் வகுப்பு படித்துவிட்டு போளூரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் வேலை செய்து வந்தார். வழக்கம் போல் காலையில் வேலைக்கு சென்று மாலை வீடு திரும்புவார். கடந்த 23-ந் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். ஆனால் மாலை அவர் வீ்ட்டுக்கு வராததால் பல இடங்களில் அவரது தந்தை தேடினார். பின்னர் இதுகுறித்து போளூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வந்தனர்.
இ்ந்த நிலையில் போளூர் அருகே சீனந்தல் கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்ற சின்னராஜ் (வயது 24) என்ற பொக்லைன் டிரைவர் இளம்பெண்ணை கடத்தி சென்று கடந்த 30-ந்தேதி கோவிலில் திருமணம் செய்து கொண்டது தெரிய வந்தது.
இதையடுத்து மைனர் பெண்ணை கடத்தி சென்றதாக இன்று முருகேசனை போலீசார் கைது செய்தனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.