ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் வரும் 21 ந்தேதி ஆடி வெள்ளித் திருவிழா தொடக்கம்
திருவண்ணாமலை அருகே உள்ள படவேடு ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயிலில் ஆடிவெள்ளி உற்சவம் வரும் ஜூலை 21-ஆம் தேதி தொடங்குகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அடுத்த படவேடு கிராமத்தில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ஸ்ரீ ரேணுகாம்பாள் கோயிலில் ஆடிவெள்ளி உற்சவம் வரும் 21-ஆம் தேதி தொடங்குகிறது.
தமிழகத்தில் சிறப்பு வாய்ந்த சக்தி தலங்களில் ஒன்றான படவேடு ரேணுகாம்பாள் திருக்கோயிலில் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமைகளில் மூலவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு ஆடித்திருவிழா, முதல் வெள்ளிக்கிழமையான ஜூலை 21-ஆம் தேதி தொடங்குகிறது.
அன்று அன்னவாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்க உள்ளாா். 2-ஆம் வெள்ளிக்கிழமை (ஜூலை 28) சிம்ம வாகனத்தில் துா்காதேவி அலங்காரத்திலும், 3-ஆவது வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 4) காமதேனு வாகனத்தில் அம்மன் சிவலிங்க ஆலிங்கண அலங்காரம், ஆடிகிருத்திகை நாளான ஆகஸ்ட் 6-இல் மயில் வாகனத்தில் முருகப் பெருமான் அலங்காரம், 4-ஆம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 11) நாக வாகனத்தில் ஸ்ரீ மகாலட்சுமி அலங்காரம், 5-ஆம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 18 ) குதிரை வாகனத்தில் மகிஷாசூரமா்த்தினி அலங்காரம், 6-ஆம் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 25) முத்துரதத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரம், 7-ஆம் வெள்ளிக்கிழமை (செப்டம்பா் 1) கருட வாகனத்தில் ராமா் சீதை அலங்காரத்தில் இரவு பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளாா்.
ஆடி வெள்ளிக்கிழமைகளில் படவேடு கோயிலுக்கு திருவண்ணாமலை, வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் உள்ளிட்ட அண்டை மாவட்டங்கள் மட்டுமன்றி ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து பொங்கலிட்டு, நோத்திக் கடன் செலுத்தி வழிபாடு செய்வாா்கள்.
திருவிழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் செய்து வருகின்றனா்.
ஆரணி
ஆரணி கோட்டை வேம்புலி அம்மன் கோவிலில் ஆடி வெள்ளி விழா நாளை தொடங்குகிறது.
ஆரணி கோட்டை மைதானம் அருகே காவலர் குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள வேண்டும் வரங்களை தந்திடும் கோட்டை ஸ்ரீ வேம்புலி அம்மன் கோவிலில் 50-வது ஆண்டாக ஆடி வெள்ளி விழா நாளை தொடங்குகிறது.இதனையொட்டி நாளை (வியாழக்கிழமை) மாலை 6 மணி அளவில் கோவில் வளாகத்தில் உலக நன்மைக்காக சிவகாளி சித்தர் பீடம் சித்தஞ்சலி மோகனந்தா சுவாமிகள் தலைமையில் 508 விளக்கு பூஜை நடக்கிறது.
தொடர்ந்து 21-ந் தேதியன்று முதல் வெள்ளியையொட்டி அதிகாலையிலேயே அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் மகா அலங்காரம் , மகா தீபாராதனையுடன் நடக்கிறது. தொடர்ந்து ஆரணி கமண்டல நாக நதி ஆற்றங்கரையிலிருந்து பூங்கரகம் ஜோடித்து பம்பை உடுக்கைகளுடன் நகரின் முக்கிய வீதியின் வழியாக ஊர்வலம் நடக்கிறது. பின்னர் கோவில் வளாகத்தில் கூழ்வார்த்தல் திருவிழாவும் நடைபெறுகின்றது.
புஷ்ப பல்லக்கு
மாலையில் கோவில் அருகாமையில் இருந்து நூதன புஷ்பப் பல்லக்கில் சுவாமிகளை அலங்கரித்து புஷ்பப் பல்லக்கினை ரத்தனகிரி பாலமுருகன் அடிமை சுவாமிகள் தொடங்கி வைக்கவும், நகரின் மாட வீதியின் வழியாக நாதஸ்வரம் , தவில் இசை கச்சேரி, தாரை ,தப்பட்டை, ஒயிலாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சிகள் ,கரகாட்டம் குழுக்களுடன் நடக்கிறது.
விழாவையொட்டி ஆரணி நகரில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ள கோட்டை மைதானத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பொழுதுபோக்கு அம்சமான ராட்டினங்கள், 'டோரா டோரா', மரண கிணறு, கப்பல் உள்ளிட்ட அம்சங்களும் அமைக்கப்பட்டு வருகின்றது.
விழாவுக்கான ஏற்பாட்டினை விழா குழு தலைவர் உள்பட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.