ஜவ்வாது மலைப்பகுதியில் மீண்டும் களம் இறங்கிய ஒற்றை தந்த யானை

ஜவ்வாது மலைப்பகுதியில் சாலையை வழிமறித்து ஒற்றைத் தந்த யானை நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-09-09 01:06 GMT

ஒற்றை தந்தத்துடன் கூடிய யானை 

திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த ஜவ்வாது மலை பகுதிக்கு ஜமுனாமரத்தூர் வனப்பகுதியில் ஒற்றை தந்தத்துடன் கூடிய யானை தற்போது வலம் வரும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. இந்த ஒற்றை யானை போளூரில் இருந்து ஆலங்காயம் செல்லும் சாலையில் நீலகிரி மரம் தோப்பு அருகே சாலையின் நடுவே நின்று கொண்டிருந்தது.

அப்போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து மற்றும் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாமல் அச்சத்தின் காரணமாக சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக நின்று கொண்டிருந்தனர்.

மேலும் யானையைக் கண்ட பொதுமக்களும் வாகன ஓட்டிகள் பயணிகளும் அதிர்ச்சியுடன் தங்கள் செல்போன்களின் படம் எடுத்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு யானை காட்டுப்பகுதிக்குள் சென்றது. இதனால் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பயன் பயணிகள் நிம்மதி அடைந்தனர்.

மீண்டும் சாலைக்கு வந்து விடுமோ என்று அச்சத்துடனே அப்பாதையை கடந்து சென்றனர்.

இதுகுறித்து ஜவ்வாது மலையில் உள்ள வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வருவதற்குள் யானை காட்டுக்குள் சென்று விட்டது. யானை காட்டுக்குள் செல்லும் வரை பொதுமக்கள் அச்சத்துடன் இருந்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலைக்கு மீண்டும் திரும்பிய ஒற்றை கொம்பு யானையின் நட மாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள், வனத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில், ஆந்திர மாநிலத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைக்கு யானைகள் கூட்டம் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வந்தன. அதில் இரு யானைகள் இறந்துவிட, மேலும் பல யானைகள், தண்டராம்பட்டு வனப் பகுதியில் புகுந்தன. பின்னர், அந்த யானைகளை மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், முதுமலை கொண்டு சென்றுவிட்டனர்.

இந்த யானை கூட்டத்தில் பிரிந்த ‘ஒற்றை கொம்பு’ ஆண் யானை, ஜவ்வாது மலையில் தஞ்சமடைந்தது. அங்கு விளையும் பலா உள்ளிட்ட இயற்கை சார்ந்த உணவுகளை உட்கொண்டு மக்களுடன் இணைந்து வாழ தொடங்கியது. ஒற்றை கொம்பு யானையால் பாதிப்பு இல்லாததால் மக்களும் அச்சமின்றி வாழ்ந்து வந்தனர். யானைக்கு கண் பார்வை குறைவாக உள்ளதால், சாலையோரத்தில் உள்ள வனப்பகுதியில் வாழ்ந்தது.

இதற்கிடையில் ஜவ்வாதுமலையில் இருந்து கடந்த 8 மாதங்களுக்கு முன்பு வெளியேறிய ஒற்றை கொம்பு யானை, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் தஞ்சமடைந்தது. அதன்பிறகு யானையின் நடமாட்டம் குறித்து வெளி உலகுக்கு தெரியவில்லை. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து ஒற்றை கொம்பு யானை, ஜவ்வாதுமலைக்கு மீண்டும் திரும்பியுள்ளது. ஒற்றை கொம்பு யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News