ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற தம்பதியர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற கணவன், மனைவி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்
கிணற்றில் தவறி விழுந்த ஆட்டுக்குட்டியை காப்பாற்ற முயன்ற கணவன், மனைவி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த பெரியகரம் ஊராட்சிக்கு உட்பட்ட மதுரா காந்தி பகுதியை சேர்ந்தவர் சேகர் மகன் குமார், விவசாயி. இவரது மனைவி வளர்மதி. இவர்களது மகன்கள் சசிபிரசாத், பிரகாஷ். சொந்த நிலத்தில் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களது ஆட்டுக்குட்டி நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது திடீரென அங்குள்ள விவசாய கிணற்றில் தவறி விழுந்தது. இதை பார்த்த குமாரின் மனைவி வளர்மதி ஆட்டுக்குட்டியை காப்பாற்ற கிணற்றில் குதித்தார். மனைவி கிணற்றில் குதிப்பதை பார்த்த குமாரும் விரைந்து வந்து கிணற்றில் குதித்து மீட்க முயன்றார்.
ஆனால், கிணற்றில் குதித்ததில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு நீரில் மூழ்கி இறந்தனர். அப்பகுதி மக்கள் இருவரது சடலங்களையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர். மேலும், போளூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக போளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குமாரின் தாயார் கண்ணகி கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஹேமாவதி, சப்- இன்ஸ்பெக்டர் கருணாகரன் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்ற முயன்றபோது நீரில் மூழ்கி கணவன், மனைவி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கல்லூரி மாணவர் உயிரிழப்பு
செய்யாறு அருகே நண்பர்களுடன் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் கிணற்றில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த கீழ்புதுப்பாக்கம் கிராம விரிவு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ், கேபிள் டிவி ஆபரேட்டர். இவரது 2வது மகன் வெங்கடேசன். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2 ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், நேற்று மாணவன் வெங்கசேடன் கல்லூரிக்கு செல்வதாக தனது வீட்டில் கூறி சென்றுள்ளார். ஆனால், கல்லூரிக்கு செல்லாமல் தன்னுடன் படிக்கும் நண்பர்கள் லோகேஷ், கிரீனாத், கிரிதரன், குருசாமி ஆகிய 4 பேருடன் கல்லூரி அருகில் செய்யாற்றைவென்றான் மோட்டூர் கிராமத்தில் விவசாய பம்பு செட்டில் உள்ள கிணற்றில் குளித்துள்ளார்.
அப்போது, கிணற்றின் மேல்புறத்தில் இருந்து ஒவ்வொருவராக நீரில் குதித்தபோது எதிர்பாராதவிதமாக வெங்கடேசன் நீரில் மூழ்கினார். இதனால் மூச்சுத்திணறி தவித்த அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால், வெங்கடேசன் மயக்கம் அடைந்தார். தொடர்ந்து, மாணவர்கள் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து வெங்கடேசனை மீட்டு செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில், வெங்கடேசன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து வெங்கடேசனின் தந்தை பிரகாஷ் அனக்காவூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன் மற்றும் சப்- இன்ஸ்பெக்டர் கன்னியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.