தைப்பூச விழாவை முன்னிட்டு காளை விடும் நிகழ்ச்சி
கண்ணமங்கலத்தில், தைப்பூச விழாவை முன்னிட்டு காளை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் பேரூராட்சி, புதுப்பேட்டையில் தைப்பூச விழாவை முன்னிட்டு காளை விடும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
காலை செல்வ விநாயகர் கோயிலில் சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்றது. பொது மக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதை அடுத்து, காளை விடும் விழாவை கண்ணமங்கலம் பேரூராட்சி முன்னாள் தலைவர் கோவர்தனன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை காளை விடும் விழா நடைபெற்றது. விழாவில் 174 காளை மாடுகள் பங்கேற்று ஓடின போட்டிகளில் வென்ற 72 காளைகளின் உரிமையாளர்களுக்கு, விழா குழுவினர் பரிசுகளை வழங்கி பாராட்டினர். முதல் பரிசாக ரூபாய் 75 ஆயிரத்தை பொலிரோ காளையும், இரண்டாம் பரிசாக ரூபாய் 65 ஆயிரத்தை மன்னாதி மன்னன் காளையும், மூன்றாம் பரிசாக ரூ. 55 ஆயிரத்தை மேல குப்பம் பிரியா காளையும், வென்றன.
இந்நிகழ்ச்சியில் கண்ணமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவர் குமார், வார்டு கவுன்சிலர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய குழு அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக சிவசக்தி வள்ளி முத்து மாரியம்மன் கோவிலில் மூலவர் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை நடைபெற்று சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.
ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் புகழ் , கோகுல்ராஜன் கண்ணமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர்கள் விஜயகுமார் , தரணி , ஏழுமலை உள்ளிட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.