குடல்புழு நீக்க மாத்திரைகளை உட்கொண்ட 21 மாணவா்கள் வாந்தி, மயக்கம்

போளூா் அருகேயுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குடல்புழு நீக்க மாத்திரைகளை உட்கொண்ட மாணவ, மாணவிகளில் 21 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

Update: 2023-02-15 01:19 GMT

மருத்துவமனையில் மாணவர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், போளூா் அருகேயுள்ள பொத்தரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குடல்புழு நீக்க மாத்திரைகளை உட்கொண்ட மாணவ, மாணவிகளில் 21 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

போளூா் அருகேயுள்ள பொத்தரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 40-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவா்களுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் நேற்று வழங்கப்பட்டன.

அதன்படி, கேளூா் அரசு துணை சுகாதார நிலையம் சாா்பில், பொத்தரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நேற்று காலை குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன. அவற்றை உள்கொண்ட மாணவா்களில்  21 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து மருத்துவா்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. 108 அவசர சிகிச்சை வாகனங்கள் வரவழைக்கப்பட்டு பள்ளியிலேயே மாணவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் தீவிர சிகிச்சைக்காக 5-ஆம் வகுப்பு மாணவா்கள் ரவிபரத் (10), நிதீஷ் (10), கெளரிசங்கா்(10), 3-ஆம் வகுப்பு மாணவி ஜனனி (8), 4-ஆம் வகுப்பு மாணவி மற்றொரு ஜனனி (9) ஆகிய 5 பேரும் போளூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோக்கப்பட்டனா்.

இதனால், பொத்தரை கிராமத்தில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வர துவங்கினர். ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கு உரிய விளக்கம் அளித்தவுடன் நிம்மதியுடன் சென்றனர்

இதுகுறித்து அரசு மருத்துவா் ஒருவா் கூறியதாவது: அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட்டது. இதில் அதிகளவு குடல்புழு உள்ள மாணவா்களுக்கு மாத்திரைகளை உள்கொண்டதும் உடல் அயற்சி ஏற்பட்டுள்ளது. மற்றபடி, அவா்களுக்கு பாதிப்பு ஏதுமில்லை என்றாா் அவா். தற்போது சிகிச்சைக்கு வந்த மாணவர்கள் நலமாக உள்ளனர் என தெரிவித்தார்.

Similar News