பெரணமல்லூர் அருகே 100 நாள் திட்ட தொழிலாளர்கள் சாலை மறியல்
பெரணமல்லூர் அருகே 100 நாள் திட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா பெரணமல்லூர் அருகே 100 நாள் திட்ட தொழிலாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பெரணமல்லூர் அருகே பில்லாந்தி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 100 நாள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில் 5 மற்றும் 6-வது வார்டுகளில் உள்ள 180 பேரை 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு அழைத்து சென்று பணி வழங்குவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவர்கள் ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவரிடம் எங்களை மட்டும் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்று வேலை செய்யுங்கள் என்று கூறுகின்றனர். எனவே, எங்களை கிராமத்தின் அருகில் வேலை கொடுங்கள் என்று கேட்டுள்ளனர்
ஆனால் இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர்எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த100 நாள் தொழிலாளர்கள் வந்தவாசி -ஆரணி செல்லும் சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் பெரணமல்லூர் போலீசார் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றனர். - பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து 100 நாள் தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலில் அந்த பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.