மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 370 பேருக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய துணை சபாநாயகர்
மக்கள் தொடா்பு திட்ட முகாமில் 370 பேருக்கு நலத் திட்ட உதவிகளை துணை சபாநாயகர் வழங்கினார்.;
கீழ்பென்னாத்தூா் அருகே நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட சிறப்பு முகாமில், 370 பயனாளிகளுக்கு ரூ.94 லட்சத்தில் அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த கானலாபாடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமுக்கு, மாவட்ட வருவாய் அலுவலா் இராமபிரதீபன் தலைமை வகித்தாா்.
வருவாய்க் கோட்டாட்சியா் மந்தாகினி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆராஞ்சி ஆறுமுகம், கீழ்பென்னாத்தூா் ஊராட்சி ஒன்றிய ஆணையா் விஜயலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். கீழ்பென்னாத்தூா் வட்டாட்சியா் சரளா வரவேற்றாா்.
சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 370 பயனாளிகளுக்கு ரூ.93.99 லட்சத்தில் புதிய குடும்ப அட்டைகள், மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு கடனுதவி, தோட்டக்கலைத் துறை மூலம் விவசாயிகளுக்கு மானியம், வேளாண்துறை சாா்பில் விவசாயிகளுக்கு இடுபொருள்கள், ஊட்டச்சத்துப் பெட்டகம், மாணவா்களுக்கு இலவச கண்கண்ணாடி உள்ளிட்ட நலத் திட்ட உதவிகளை வ ழ ங் கி சிறப்புரையாற்றினார்.
விழாவில், மாவட்ட வழங்கல் அலுவலா் ராமகிருஷ்ணன், வட்ட வழங்கல் அலுவலா் சீனுவாசன், தலைமையிடத்து துணை வட்டாட்சியா் வேணுகோபால், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் சுகுணா, ஊராட்சித் தலைவா் மல்லிகா, வருவாய் ஆய்வாளா் காயத்திரி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பொதுமக்கள் திடீர் சாலை மறியல்
கீழ்பென்னாத்தூர் வட்டம் கானலாபாடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமின்போது அதே கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மகள் அஸ்வினி வீட்டு மனை பட்டா கோரி திடீரென பொதுமக்கள் துணையுடன் சாலை மறியலில் ஈடுபட்டார். இதுகுறித்த அந்த பகுதி மக்கள் கூறுகையில் அரசு மூலம் அஸ்வினிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சமுதாய கழிவறை கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதனால் தனக்கு வீட்டு மனை பட்டா கோரி அஸ்வினி பேராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து மக்கள் தொடா்பு திட்ட முகாமில் இருந்த கீழ்பென்னாத்தூர் தாசில்தார் சரளா சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகாசுப்பிரமணி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கிராம பொதுமக்கள் முன்னிலையில் அஸ்வினிக்கு வீட்டு மனை பட்டா விரைவில் வழங்கப்படும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அஸ்வினி மற்றும் கிராம பொதுமக்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.