கீழ்பென்னாத்தூரில் விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்
விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் ஏற்கனவே கொடுத்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை விவசாயிகள் குற்றச்சாட்டு
கீழ்பென்னாத்தூரில் நடைபெற்ற வட்ட அளவிலான குறைதீர்வு கூட்டத்தில் ஏற்கனவே கொடுத்த மனுக்கள மீது நடவடிக்கை எடுக்காததால் கூட்டத்தில் விவசாயிகள் ஆவேசத்துடன் குற்றஞ்சாட்டினர்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மைய கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற வட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு கோட்டாட்சியர் மந்தாகினி தலைமை தாங்கினார். வட்டாட்சியர் சரளா, ஆணையாளர் பா.விஜயலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்மை உதவி இயக்குனர் அன்பழகன் (வேளாண்மை) வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் கீழ்பென்னாத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
கீழ்பென்னாத்தூர் கோட்டான் ஏரியின் உபரி நீர் வெளியேற கால்வாய் அமைத்து அனைத்து விவசாயிகளுக்கும் பயன்படுத்தும் வகையில் அமைத்திட வேண்டும், ஆவின் பால் கொள்முதலை அதிகரிக்க அதிக வேலை ஆட்களை நியமிக்க வழிவகை செய்திட வேண்டும். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நெல் மூட்டைகளை எடைபோட பணம் பெறுவதை தடுக்க வேண்டும். வேட்டவலம் தலவாய்குளம் சந்தையில் அதிக வரி வசூல் செய்வதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். இதனை முறைபடுத்த சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த மாதம் நடைபெற்ற ஜமாபந்தியில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் உள்ள ஏரியில் இரவு நேரங்களில் பொக்லைன் எந்திரம் மூலம் மண்ணை கடத்தி வருகின்றனர். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாத்தனூர் அணையில் வரும் தண்ணீரை நந்தன் கால்வாயில் இணைத்து விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கீழ்பென்னாத்தூரில் அமைந்து ள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய ஏரி, கோட்டான் ஏரி உபரி நீர் செலும் செல்லும் கால்வாய்கள் ஆக்கிரமிப்பை அகற்றி இதில் கழிவுநீர் கலப்பதினை தடுத்திட வேண்டும். என விவசாயிகள் பேசினர்.
விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பதில் அளித்தனர்.
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவல ர் ரவிச்சந்திரன், ஆவின் செயலாட்சியர் தமிழரசி, அட்மா ஆலோசனை குழு தலைவர் சிவக்குமார், விவசாய சங்க தலைவர்கள் அகரம் பழனிசாமி , அரும்பாக்கம் ரஜினிமுருகன், வேட்டவலம் திருமூர்த்தி மற்றும் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் வேளாண்மை அலுவலர் பரணிதரன் நன்றி கூறினார்.
விவசாய கூட்டத்தில் கடந்த மாதம் கொடுத்த மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என கேட்டதற்கு எந்த பதிலும் தெரிவிக்காததால், விவசாயிகள் ஆவேசத்துடன் பேசியதால் கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.