தேர்தல் நடத்தை விதி மீறல்: திமுக எம்எல்ஏ அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு

தேர்தல் நடத்தை விதி மீறியதாக செய்யாற்றில் திமுக எம்எல்ஏ அதிமுக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2024-03-22 01:40 GMT

வழக்குப்பதிவு பைல் படம்

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது இதில் தமிழக மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளது.

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் தேர்தல் நடத்தை விதி மீறியதாக செய்யாறு திமுக எம்எல்ஏ ஜோதி மற்றும் செய்யாறு அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் எம்எல்ஏவும் ஆன தூசி மோகன் உட்பட 80 பேர் மீது செய்யாறு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியானது. அதேபோல், அதிமுக சார்பிலும் முதற்கட்ட பட்டியல் வெளியானது. அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி மக்களவை தொகுதி வேட்பாளராக திமுக சார்பில் வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் அறிவிக்கப்பட்டார். இதை வரவேற்கும் விதமாக செய்யாறு எம்எல்ஏ ஜோதி தலைமையில் திமுகவினர் பஸ் நிலையம் பகுதியில் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

அதேபோல், அதிமுக சார்பில் ஆரணி தொகுதியில் ஜி.வி.கஜேந்திரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதை வரவேற்கும் விதமாக வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் எம்எல்ஏவும் ஆன தூசி மோகன் தலைமையில் அதிமுகவினர் ஆரணி கூட்ரோட்டில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

இதையறிந்த செய்யாறு கொடநகர் விஏஓ தமிழரசி டவுன் போலீசில் புகார் செய்தார். அதில், திமுக மற்றும் அதிமுகவினர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி கூட்டம்கூடி பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக கூறியிருந்தார். அதன்பேரில், செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி உட்பட திமுகவினர் 40 பேர் மீதும், அதிமுக மாவட்ட செயலாளர் தூசி கே.மோகன் உட்பட அதிமுகவினர் 39 பேர் மீதும் சப்- இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். திமுக ,  அதிமுக என பிரதான கட்சிகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News