வாக்காளர் அட்டைகளை ஒப்படைக்க வந்த கிராம மக்கள்

வந்தவாசி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கூறி வாக்காளர் அட்டை, ஆதார் அட்டைகளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கிராம மக்கள் ஒப்படைத்தனர்.

Update: 2023-05-17 10:13 GMT

வாக்காளர் அட்டைகளை ஒப்படைக்க வந்த கிராம மக்கள்.

வந்தவாசி அடுத்த இரும்பேடு கிராமம் காலனி பகுதியில் 150- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, சாலை வசதி, கழிவுநீர் கால்வாய்கள், சுகாதார வளாகம் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாததால் கிராம மக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி முற்றிலும் சேதம் அடைந்து கீழே விழும் அபாயத்தில் இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் செல்கின்றனர். இந்த நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்து பல வருடங்கள் ஆகிறது என கிராம மக்கள் குற்றம் சாட்டினர்.

இந்த நிலையில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பலமுறை ஊராட்சி மன்ற தலைவரிடம் புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த இரும்பேடு கிராமம் காலனி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு சென்று வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வாக்காளர் அடையாள அட்டை , ஆதார் அட்டை மற்றும்  ரேஷன் அட்டைகளுடன் சென்று வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜன்பாபுவிடம் ஒப்படைக்க வந்தனர். 

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் உங்களின் கோரிக்கைகளை மனுவாக கொடுங்கள் அதன் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனை ஏற்று பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளான அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி கோரிக்கை மனு அளித்தனர்.

Tags:    

Similar News