ஆரணி அருகே போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
ஆரணியை அடுத்த வெள்ளேரி கிராமத்தில் போலீசாரை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த வெள்ளேரி கிராமத்தை சேர்ந்தவர் தரணி குமார். சென்னை சுங்குவார்சத்திரம் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி இரவு பணியை முடித்துக்கொண்டு வெள்ளேரி அருகே பேருந்து நிலையத்தில் இறங்கி நடந்து அதிகாலை 3 மணியளவில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிள் மோதியதில் தரணி குமார் பலத்த காயமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இந்த விபத்து குறித்து மருத்துவமனையில் இருந்து வந்த தகவலின் பேரில் போலீசார் தரணி குமார் வீட்டுக்கு எதுவும் தெரிவிக்கவில்லை, மேலும் ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் தரணி குமார் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இறந்த பிறகுதான் தரணி குமாரின் வீட்டுக்கும் கிராம மக்களுக்கு தெரியவந்தது.இதனால் போலீஸாரைக் கண்டித்து வெள்ளேரி கிராம மக்கள் ஆரணி , ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், நகர காவல் ஆய்வாளர் கோகுல்ராஜ், கிராமிய உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் வந்து மறியலில் ஈடுபட்டவர்களை சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது டிஎஸ்பி ரவிச்சந்திரன் விபத்துக்கு காரணமான நபரை கைது செய்வோம், நிவாரண உதவியாக ரூபாய் ஒரு லட்சம் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்வோம் என உறுதியளித்தார்.
இதை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டனர் , மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.