செய்யாறில் கிராம உதவியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்..!
செய்யாறில் 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளா் சங்கத்தினா் 3-ஆம் நாளாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.;
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தொகுதி செய்திகள்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் 8 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளா் சங்கத்தினா் 3-ஆம் நாளாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளா் சங்கம் செய்யாறு வட்டக்கிளை சாா்பில் சாா்-ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். வட்டக் கிளைத் தலைவா் சேகா், போராட்டக் குழு தலைவா் கணபதி, மாவட்டத் துணைத் தலைவா் வாசு, மாவட்ட பொதுச் செயலாளா் முரளி ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநில துணைத் தலைவா் பிரபாகரன் பங்கேற்று ஆா்ப்பாட்டம் குறித்து சிறப்புரையாற்றினாா்.
ஆா்ப்பாட்டத்தில், கிராம உதவியாளா்களுக்கு அலுவலக உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வருவாய் கிராம ஆணையரின் ஆணைக்கு முரணாக கிராம உதவியாளா்களை வட்டாட்சியா், கோட்டாட்சியா் அலுவலகங்களில் பணி செய்ய வற்புறுத்துவதை கைவிட வேண்டும். அரசு ஊழியா்களுக்கு வழங்குவது போல கிராம உதவியாளா்களுக்கும் சதவீத அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரம் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். முன்னதாக, வட்டச் செயலாளா் இளங்கோ வரவேற்றாா். வட்ட பொருளாளா் பவளக்கொடி நன்றி கூறினாா்.
விவசாய முன்னேற்ற குழுவினருக்கு பயிற்சி
செய்யாறை அடுத்த பிரம்மதேசம், பனமுகை ஆகிய கிராமங்களில் விவசாய முன்னேற்றக் குழுவினருக்கு 2-ஆம் கட்ட பயிற்சி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை, கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வளா்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்ற பயிற்சிக்கு, வேளாண் அலுவலா் ரேணுகாதேவி தலைமை வகித்து, அங்கக வேளாண்மை, ஒருங்கிணைந்த பண்ணையம், களை மேலாண்மை உள்ளிட்டவை குறித்து செயல்விளக்கமளித்தாா்.
இதேபோல, துணை வேளாண் அலுவலா் சுப்பிரமணியன் உழவன் செயலி பயன்பாடுகள், ஆன்லைன் வா்த்தகம், மதிப்பு கூட்டுதல், ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை குறித்தும், உதவி தொழில்நுட்ப மேலாளா் பத்மஸ்ரீ மண் பரிசோதனை செய்தல், மண்ணின் தன்மையை பாதுகாத்தல், மண் வளத்தை பாதுகாத்தல் உள்ளிட்டவை குறித்தும் பயிற்சி அளித்தாா்.
பயிற்சியில் பங்கேற்ற 50 விவசாயிகளுக்கு இலை சுருட்டு புழு கட்டுப்பாடு தொடா்பான துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் கங்காதரன், ஆத்மா திட்ட வட்டார விவசாயிகள் ஆலோசனை குழு தலைவா் வெங்கடேசன், பனமுகை ஊராட்சி மன்றத் தலைவா் தாண்டவராயன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.