விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் குண்டர் சட்டத்தில் கைது

மணல் கடத்தல் வழக்கில், செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கொலைமிரட்டல் விடுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-03-31 02:00 GMT

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு கன்னியம் நகரை சேர்ந்தவர் தெய்வசிகாமணி. விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகரான இவருடைய லாரி, மணல் கடத்தலில் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 24-ந் தேதி செய்யாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு சென்ற தெய்வசிகாமணி, வழக்கிலிருந்து லாரியை விடுவிக்க, லாரியில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மணலை,  வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒப்படைத்ததை போன்று ஆவணங்கள் தயார் செய்து தரும்படி,  வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கரிடம் கூறி உள்ளார்.

அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் மறுப்பு தெரிவித்ததால் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெய்சங்கர், போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் செய்யாறு போலீசார், வழக்குப்பதிவு செய்து தெய்வசிகாமணியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி வந்தவாசி சிறையில் அடைத்தனர். 

தெய்வசிகாமணி மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இவர் பொது அமைதிக்கு பாதகமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் என்றும், இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவருடைய பரிந்துரையின் பேரில் தெய்வசிகாமணியை குண்டர் சட்டத்தில் கைது செய்து, வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்க மாவட்ட கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார்.

Tags:    

Similar News