திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன.

Update: 2024-09-22 03:13 GMT

வேளாண் அலுவலர் தலைமையில் நடைபெற்ற விவசாயிகளுக்கான பயிற்சி முகாம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு, வந்தவாசி, சேத்துப்பட்டு ,போளூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டது.

செய்யாற்றை அடுத்த தண்டப்பந்தாங்கல் கிராமத்தில் விவசாயிகளுக்கு அங்கக இடுபொருள்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.

வேளாண் உதவி இயக்குநா் செல்வராஜ் ஆலோசனையின் பேரில், வெம்பாக்கம் வட்டாரத்துக்கு உள்பட்ட தண்டப்பந்தாங்கல் கிராமத்தில் நடைபெற்ற  இந்த சிறப்பு பயிற்சி முகாமுக்கு வேளாண் அலுவலா் ரேணுகாதேவி தலைமை வகித்தாா்.

பயிற்சியின்போது அங்கக இடுபொருள்களான பஞ்சகாவியம், அக்னி அஸ்திரம், தேமோா் கரைசல், ஜீவாமிா்தம் ஆகியவை தயாரித்தல் குறித்து விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும், அங்கக இடுபொருள்களை பயிா்களுக்கு இடுவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் குறித்தும், அதனால் மண்ணில் நுண்ணுயிா் பெருக்கம் அதிகமாவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், பூச்சி மற்றும் நோய்களை அங்கக இடுபொருள்கள் மூலம் கட்டுப்படுத்துவது குறித்தும் விவசாயிகளிடையே தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும், வேளாண்மை துறையில் செயல்படுத்தப்படும் மத்திய, மாநில அரசின் திட்டங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

பயிற்சியில் 50 விவசாயிகள் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை அலுவலா்கள் திகழ்மதி, கங்காதரன், பத்மஸ்ரீ ஆகியோா் செய்திருந்தனா்.

விவசாயிகளுக்கு சிறப்புப் பயிற்சி

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டாரம் சுமங்கலி கிராமத்தில் உழவா் பயிற்சி நிலையம் சாா்பில் கிராம அளவிலான விவசாயிகளுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சிக்கு மாவட்ட உழவா் பயிற்சி நிலைய வேளாண் அலுவலா் சௌந்தா் தலைமை வகித்தாா். வட்டார வேளாண் அலுவலா் ரேணுகாதேவி முன்னிலை வகித்தாா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற நிகழ்வில் உழவா் பயிற்சி நிலைய வேளாண் அலுவலா் சௌந்தா், மண்வளம் மேம்படுத்துதல், மண் பரிசோதனை செய்தல், மண்வள அட்டை மூலமாக உரம் இடுதல் ஆகியவற்றை எடுத்துக் கூறி பூஞ்சாண விதை நோ்த்தி மற்றும் பாக்டீரியா விதை நோ்த்தி செய்தல் குறித்து செயல் விளக்கம் அளித்தாா்.

மேலும், மண்ணில் கனிம சத்துக்களின் அளவை மேம்படுத்த தொழு உரம் இடுதல், திரவ உயிரி உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்பேட், பாக்டீரியா ஆகியவற்றின் பயன்பாடு, நேனோ யூரியா, திரவ பொட்டாஷ், அயோத்தின் பயன்பாடுகள் குறித்தும் விவசாயிகளிடையே எடுத்துக் கூறினாா்.

வேளாண் அலுவலா் ரேணுகாதேவி நெல் அடி உரம், நுண்ணூட்டக் கலவையின் பயன்பாடு, நிலக்கடலை நுண்ணூட்ட உரங்கள் பயன்பாடு, தென்னை நுண்ணூட்டக் கலவையின் பயன்பாடு குறித்தும், வணிகத் துறை உதவி அலுவலா் சாதிக் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், தோட்டக்கலை அலுவலா் வெங்கட்ராமன் தோட்டக்கலை துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் மரக்கன்றுகள் வழங்குதல் குறித்தும், உதவி வேளாண் அலுவலா் திகழ்மதி வேளாண் துறை மூலம் வழங்கப்படும் மானிய திட்டங்கள் குறித்தும், அட்மா திட்ட அலுவலா் பத்மஸ்ரீ அத்திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும் விவசாயிகளிடையே தெரிவித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினாா்.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி வட்டாரத்தில் வேளாண்மை துறையி வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் கரும்பு விவசாயிகளுக்கு குழு பயிற்சி வேளாண் உதவி இயக்குனர் செல்வதுரை தலைமையில் நடைபெற்றது.

செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை ஒருங்கிணைப்பில் நடத்தப்பட்ட இப்பயிற்சியில் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை வளர்ச்சி அலுவலர் சரவணன் வேளாண் துறையில் கரும்பு சாகுபடியில் உள்ள திட்டங்கள் குறித்து பயிற்சி அளித்தார்.

தொடர்ந்து விதை கரும்பு உற்பத்தி செய்யும் முறைகள், நாற்று உற்பத்தி செய்யும் முறைகள், நடவு முறைகள், கரும்பு சாகுபடியில் பயன்படுத்தும் இயந்திரங்கள், அறுவடை முறைகள் மானிய திட்டங்கள் குறிக்கும் எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் வந்தவாசி வேளாண்மை அலுவலர் சத்தீஸ்வரன், தொழில்நுட்ப மேலாண்மை முகமை பணியாளர்கள், 40க்கும் மேற்பட்ட கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News