செய்யாறு திண்டிவனம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க வியாபாரிகள் கோரிக்கை

செய்யாறு வழியாக காஞ்சிபுரம் -ஆரணி ரோடு- வாலாஜா- ஆற்காடு- செய்யாறு- திண்டிவனம் இடையே புதிய ரயில் பாதை அமைக்க பொதுமக்கள் வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

Update: 2024-06-07 12:29 GMT

பைல் படம்

திருவண்ணாமலை மாவட்டம் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு வட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் செய்யாறு தொழில் பேட்டை அமைந்துள்ளது. இங்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் , அந்த நிறுவனங்களில் 50,000 மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

மேலும் பிரபலமான ராயல் என்பீல்டு நிறுவனம் இப்பகுதியில் தான் தனது உற்பத்தியை தொடங்க உள்ளது. அதேபோல மகேந்திரா வாகன சோதனை ஓட்ட மையமும் இப்பகுதியில் தான் அமைந்துள்ளது.

செய்யாற்றில் சார் ஆட்சியர் அலுவலகம் உட்பட 160 க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இப்பகுதியில் சுமார் 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகின்றனர்.

செய்யாறு வந்தவாசி திண்டிவனம் போன்ற பகுதிகளில் தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் பணி நிமித்தமாகவும் சொந்த வேலையாகவும் மருத்துவமனை உள்ளிட்ட பிற காரணங்களுக்காகவும் வியாபாரத்திற்காகவும் ஏராளமானோர் காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வந்து செல்வதற்கு பேருந்தை மட்டுமே நம்பியுள்ள நிலையில் புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டால் சென்னையில் இருந்து நேரடியாக செய்யாறு வந்தவாசி உள்ளிட்ட பகுதிகளுக்கு புதிய ரயில் சேவையும் கிடைக்கும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் இது குறித்து பகுதி பொதுமக்கள் வியாபாரிகள் கூறுகையில், காஞ்சிபுரம் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவிலும், ஆரணி ரோடு ரயில் நிலையத்திலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிலும் செய்யாறு நகரம் அமைந்துள்ளது.

பட்டு நகரமான காஞ்சிபுரத்தில் இருந்து செய்யாறு வழியாக ஆரணி ரோடு வரை புதிதாக ரயில்வே பாதை அமைந்தால் ஆன்மீக நகரமான திருவண்ணாமலைக்கும் சென்னைக்கும் நேரடி ரயில் போக்குவரத்து வசதி கிடைக்கும்.

மேலும் தற்போது செய்யாறு வழியாக திண்டிவனம் நகரி இடையே புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது. இந்த திட்டத்தில் முதல் கட்டமாக வாலாஜா, ஆற்காடு, செய்யாறு, வந்தவாசி திண்டிவனம் இடையே புதிய ரயில் பாதை உடனடியாக அமைக்கப்பட்டால் தமிழகத்தின் தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் அரக்கோணத்தில் இருந்தும் காட்பாடியில் இருந்தும் தொலைதூர ரயில்கள் நேரடியாக இயக்க முடியும்.

மேலும் தொழில் நகரமான செய்யாறிலிருந்து வந்தவாசி வழியாக திண்டிவனத்துக்கு ரயில்வே பாதை அமைக்கும் பணியை ரயில்வே துறை மேற்கொண்ட நிலையில், செய்யாற்றில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காஞ்சிபுரத்திற்கு ரயில் பாதை அமைத்தால் அங்கிருந்து வந்தவாசி வழியாக திண்டிவனத்துக்கு ரயில் பாதை வசதி எளிதாக கிடைக்கும்

மேலும் காஞ்சிபுரம் செய்யாறு வந்தவாசி திண்டிவனம் ரயில் பாதை நேரடி வசதிகள் கிடைக்கும். குறிப்பாக செய்யாறு சிப்காட் பகுதியில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை ரயில் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கலாம். இதனால் இப்பகுதியில் வியாபாரமும் தொழில் வளமும் அதிகரிக்கும். மேலும் பல பேருக்கு வேலை வாய்ப்புகள் பெருகும்.

தென் மாவட்டங்களில் இருந்து விழுப்புரம் திண்டிவனம் வழியாக வரும் சரக்கு ரயில்களை நேரடியாக காட்பாடி அரக்கோணம் வழியாக வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கலாம் எனவும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News