விபத்தில் தொழிலாளி பலி உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்

செய்யாறு அருகே நின்றிருந்த லாரி மீது பைக் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இறந்தவரின் உறவினர்கள் சாலை மறியல் செய்தனர்.

Update: 2023-04-03 10:07 GMT

செய்யாறு அருகே நின்றிருந்த டிப்பர் லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார். இறந்தவரின் சடலத்துடன் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா மடிப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜி (வயது 35), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி தீபா (28), சிப்காட்டில் வேலை செய்து வருகிறார்.

வேலைக்கு சென்ற மனைவியை அழைத்து வர ராஜி நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். செய்யாறு அருகே பாண்டியம்பாக்கம் சாலையில் சென்றபோது நின்றிருந்த டிப்பர் லாரி மீது மோட்டார்சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானது. இதில் ராஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையறிந்த ராஜியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று காலைஅங்கு சோகத்துடன் திரண்டனர். இப்பகுதியில் செயல்படும் கல்குவாரியால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாகவும், உயிரிழப்பிற்கு காரணமாக உள்ள குவாரியை மூடும் வரை இறந்தவர் உடலை எடுக்க விடமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் விபத்து நடந்த இடத்தில் நிறுத்தி வைத்திருந்த லாரியின் கண்ணாடியை சேதப்படுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் செய்யாறு டி.எஸ்.பி. வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து வேலூர் சரக டி.ஐ.ஜி முத்துசாமி தலைமையில் காஞ்சீபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்திகேயன் ஆகியோர் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது இறந்தவரின் குடும்பத்திற்கு தமிழக அரசின் நிவாரணம் பெற்று தருவதாகவும், அப்பகுதி கல்குவாரியால் பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்கள் உறுதி அளித்தனர்.

அதனைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் 7 மணிநேர போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வந்தவாசி

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில்  புதிய பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத 70 வயது மதிக்கத்தக்க வயதான மூதாட்டி மயக்க நிலையில் இருந்ததைக் கண்ட பொதுமக்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் தெற்கு காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி மற்றும் போலீசார் மூதாட்டியை ஆம்புலன்ஸ் மூலம் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.  சிகிச்சை பலனின்றி மூதாட்டி இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.

பின்னர் மூதாட்டி உடலை பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வந்தவாசி வி.ஏ.ஓ முகமது யாசின் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News