திருவத்திபுரம் நகர மன்ற கூட்டம்: திமுக புறக்கணிப்பு, அதிமுக வெளி நடப்பு

திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சி மன்ற கூட்டத்தில் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Update: 2024-01-12 02:29 GMT

வெளிநடப்பு செய்த நகர மன்ற உறுப்பினர்கள்

திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் நகர மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் திருவத்திபுரம் செய்யாறு நகர மன்ற கூட்டத்திற்கு அதன் தலைவர் மோகனவேல் தலைமை வகித்தார். ஆணையர் குமரன், நகராட்சி பொறியாளர் தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துப்புரவு ஆய்வாளர் மதன ராசன் வரவேற்றார்.

செய்யாறு திருவத்திபுரம் நகரமன்ற கூட்டத்தை நகர மன்ற தலைவர் மோகனவேல் நடத்திக் கொண்டிருந்தார் . அப்போது திமுக கவுன்சிலர் ரமேஷ், திமுககூட்டத்தில் பேசி பேசி எதுவும் செயல்முறைக்கு வரவில்லை, கோரிக்கைகளை எழுத்து மூலமாக கொடுத்துவிட்டு போகிறேன், இதுவரைக்கும் எந்த முன்னேற்றமும் இல்லை என தலைவரிடம் வாக்குவாதம் செய்துவிட்டு கூட்டத்தில் பங்கேற்காமல் எழுந்து சென்றார்.

அதிமுக கவுன்சிலர் வெங்கடேசன் தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், நகர மன்ற தலைவர் வார்டு கவுன்சிலர்களுக்கு டெண்டர் நோட்டீஸ் அனுப்புவதில்லை, மார்க்கெட் காய்கறி அங்காடி பணி விரைந்து முடிக்கப்படவில்லை, பேருந்து நிலையத்தில் இதுவரை கடைகளுக்கு டெண்டர் கோரப்படவில்லை, தேவையான இடங்களில் சிமெண்ட் சாலை போடுவதை விட்டுவிட்டு தேவையில்லாத இடத்தில் சாலைகளை அமைக்கின்றனர்.

பேருந்து நிலைய விரிவாக்கத்திற்கு ஆக்கிரமிப்புகளை அகற்றக் கூறியும் இதுவரை கண்டு கொள்ளவில்லை. குடிநீர் விநியோகம் திட்ட கழிவு மேலாண்மை தூய்மை இந்தியா திட்டம் மற்றும் மின்கலன் வண்டிகள் கிடக்கில் போடப்பட்டு பயனற்ற நிலையில் உள்ளது. மீண்டும் புதிய வண்டிகள் வாங்க முடிவு எடுத்துள்ள நிலை போன்ற புகார்களை கூறியும் நகராட்சி நிர்வாக குளறுபடிகளை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தியும் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்வதாக தெரிவித்தனர்.

நகர மன்ற துணைத் தலைவர் பேபி ராணி இருக்கை காலியாக இருந்தது. திமுக கவுன்சிலர்கள் 12 பேர் மன்றத்தை புறக்கணித்து உள்ளதாக தெரிவித்தனர். 27 கவுன்சிலர்களைக் கொண்ட நகர மன்ற கூட்டத்தில் 10 பேர் மட்டும் விவாதத்தில் பங்கேற்றனர். பாமக கவுன்சிலர் சீனிவாசன், பத்மபிரியா ஆகியோர் நகராட்சி பணிகள் எதுவும் சரியாக நடைபெறுவதில்லை என ஆவேசமாக பேசினர். திமுக கவுன்சிலர் விசுவநாதன் பேசுகையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தில் நகராட்சி ஊழியர்களின் பங்களிப்பை பாராட்டி பேசினார்.

திமுக நகர மன்ற தலைவரை எதிர்த்து திமுக உறுப்பினர்கள் மன்ற கூட்டத்தை  புறக்கணித்தும் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தும் கூட்டம் முழுமை பெறாமல் முடிவுற்ற நிலையில் பார்வையாளர்களும் பொதுமக்களும் அதிருப்தியை தெரிவித்தனர்.

Tags:    

Similar News