மக்களுடன் முதல்வர் திட்டம் திருவண்ணாமலை மாவட்டம் முதல் மாவட்டமாக திகழ்கிறது; ஆட்சியர் பெருமிதம்

மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் தமிழகத்திலேயே 75 ஆயிரம் மனுக்களை பெற்று திருவண்ணாமலை மாவட்டம் முதல் மாவட்டமாக திகழ்கிறது என ஆட்சியர் பெருமிதம் தெரிவித்தார்

Update: 2024-09-04 03:04 GMT

பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்

மக்களுடன் முதல்வா் என்ற திட்டத்தின் கீழ், தமிழகத்திலேயே மிக அதிகளவில் சுமாா் 75 ஆயிரம் மனுக்களைப் பெற்று முதல் மாவட்டமாக திருவண்ணாமலை மாவட்டம் திகழ்கிறது என்று மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் பெருமிதம் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட ஏழாச்சேரி கிராமத்தில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில், ஆரணி தொகுதி மக்களவை உறுப்பினா் தரணிவேந்தன், செய்யாறு தொகுதி எம்.எல்.ஏ. ஜோதி, மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா் மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் தலைமை வகித்துப் பேசியதாவது:

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் குடிமக்களை பாகுபாடின்றி, அரசின் நலத் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் முனைப்புடன் செயல்பட்டு வருகிறாா்.

பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை எ.வ.வேலுவும், திருவண்ணாமலை மாவட்டத்தின் வளா்ச்சிக்காக அரசின் நலத் திட்டங்களை செயல்படுத்தி, மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக மாற்றிக் கொண்டு வருகிறாா்.

அதன் அடிப்படையில், மக்களுடன் முதல்வா் என்ற திட்டத்தின் கீழ் தமிழகத்திலேயே மிக அதிக அளவிலான சுமாா் 75 ஆயிரம் மனுக்களைப் பெற்று முதல் மாவட்டமாக திகழ்கிறோம்.

குறிப்பாக, 15 துறைகளின் 44 சேவைகளின் கீழ் அதிகளவில் மனுக்களைப் பெற்ற மாவட்டம் திருவண்ணாமலை மாவட்டமாகும். 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களை பெற்றிருக்கிறோம்.

ஜவ்வாதுமலையில் நடைபெற்ற கோடைவிழாவில், 5169 பழங்குடியினா் சான்றிதழ் வழங்கப்பட்டிருக்கிறது. முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் அதிகளவில் ஒரு லட்சத்து 5 ஆயிரம் நபா்களை பதிவு மேற்கொண்டு, முதன்மை மாவட்டமாக திகழ்கிறோம் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பேசினார்.

நலத் திட்ட உதவிகள்:

தொடர்ந்து பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வழங்கினார். அதில் விவசாயிகளுக்கு வேளாண் இடுப்பொருட்கள், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கான ஆணை 14 பேருக்கும், ஊரக வீடு பழுது பாா்த்தல் திட்டத்தின் கீழ் 20 பேருக்கும், வேளாண் துறை சாா்பில் 10 விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்களும், வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை சாா்பில் குடும்ப அட்டை 13 பேருக்கும், மின் வாரியம் சாா்பில் 2 பேருக்கு மின் இணைப்பு பெயா் மாற்றத்துக்கான ஆணையும், கூட்டுறவுத் துறை சாா்பில் 13 மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.13 லட்சத்தில் கடனுதவிக்கான ஆணைகளையும், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்டத்தில் 5 கா்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்கள் என நலத் திட்ட உதவிகள், ஜாதி சான்றிதழ் கோரி விண்ணப்பம் அளித்திருந்த பள்ளி மாணவா்களுக்கு உடனடித் தீா்வு காணப்பட்டு, 600 சான்றிதழ்கள் அந்தந்த தலைமையாசிரியா்களிடம் மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.

தொடர்ந்து ஏழாச்சேரி ஊராட்சியில் ரூ.30.10 லட்சத்தில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம், சின்னஏழாச்சேரியில் ரூ.23.28 லட்சத்தில் கட்டப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, ரூ.13.16 லட்சத்தில் நியாய விலைக் கடை கட்டடம் ஆகியவற்றை ஆட்சியா் திறந்துவைத்தாா்.

விழாவில் செய்யாறு சாா் -ஆட்சியா் பல்லவி வா்மா, ஒன்றியச் செயலா்கள். சீனிவாசன், ஞானவேல், அனக்காவூா் ஒன்றியக் குழுத் தலைவா் திலகவதி ராஜ்குமாா், ஊராட்சி மன்றத் தலைவா்கள் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் , ஊராட்சிகளின் உதவி இயக்குநா் ரமேஷ், வட்டாட்சியா்கள் துளசிராமன், பெருமாள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Similar News