சிறுவன் உயிரிழப்பு உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள்

சிறுவன் உயிரிழப்பு உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம் செய்திகள் இங்கு பதிவிடப்பட்டுள்ளது.;

Update: 2023-06-02 12:29 GMT

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா மாமண்டூர் சந்தைமேடு கிராமத்தில் உள்ள டி.கே.தெருவை சேர்ந்தவர் கேசவன். இவரது மகன் மகேஷ் , ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார்.

இவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்ற போது, சென்னை ஓட்டேரியை சேர்ந்த ரவி மகன் கோபாலகிருஷ்ணன் , மாமண்டூர் சந்தைமேடு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மகன் சதீஷ் , வரதன் மகன் வினோத்குமார் (28) ஆகியோர் மகேசை வழிமறித்து தாக்கியதாகவும், கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து கோபாலகிருஷ்ணன், வினோத் குமார், சதீஷ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மூதாட்டியிடம் நகை பறித்த வாலிபர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த மேல்மா கிராமத்தை சேர்ந்தவர் கன்னியம்மாள் . இவர், அந்த கிராமத்தில் நடைபெற்ற கூழ்வார்த்தல் திருவிழாவில் கலந்துகொண்டுவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றார்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென கன்னியம்மாளின் கழுத்தில் இருந்த 2 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றுவிட்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த மானாம்பதி கண்டிகையை சேர்ந்த அந்தோணிசாமி மகன் இக்னேசியஸ்விக்டர் என்பவர் நகையை பறித்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, அவரிடம் இருந்து 2 பவுன் சங்கிலி, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

கிணற்றில் மூழ்கி சிறுவன் மரணம்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் கோவிந்தன். கூலி தொழிலாளி. இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு வீரா , சிவா என 2 மகன்களும், செம்பருத்தி என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் குடும்பத்துடன் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த குளம் மந்தை பகுதியில் உள்ள உறவினர் வீட்டு கிரகப்பிரவேசத்தில் கலந்து கொள்வதற்காக வந்தனர். காலை கிரகப்பிரவேசம் முடிந்து அனைவரும் அருகே உள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றனர்.

கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது வீராவுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார். இதனைக் கண்ட குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து தண்ணீரில் மூழ்கிய வீராவை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் சிறுவன் கிடைக்காததால் செய்யாறு தீயணைப்பு துறையினருக்கும், அனக்காவூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி கிணற்றிலிருந்து சிறுவனை பிணமாக மீட்டனர். பின்னர் போலீசார் வீராவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News