‘கவா்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி ஏமாறாதீங்க’ செய்யாறு போலீசார், பொதுமக்களுக்கு எச்சரிக்கை

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, கவா்ச்சிகரமான விளம்பரங்களை பொதுமக்கள் நம்பி, பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம், என்று செய்யாறு போலீசார் எச்சரித்துள்ளனர்.

Update: 2023-03-02 06:44 GMT

செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், செய்யாறு காவல்துறை டிஎஸ்பி

அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கவா்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி, பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என செய்யாற்றில் போலீஸாா், பொதுமக்களுக்கு எச்சரிக்கையாக அறிவுறுத்தினா்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு காவல் கோட்ட அலுவலகத்தில் டிஎஸ்பி வெங்கடேசன் , மாவட்ட குற்றப்பிரிவு  டிஎஸ்பி சாந்தலிங்கம் ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி காவல் நிலையத்தில் நடைபெற்றது .

அப்போது அவர்கள் கூறியதாவது.

அரசு அனுமதி மற்றும் ரிசர்வ் வங்கி அங்கீகாரம் பெறாத தனியார் நிதி நிறுவனங்கள் , சீட்டு கம்பெனிகள் போன்ற தனியார் நிதி நிறுவனங்கள், ஏல சீட்டு நிறுவனங்கள் மாதாந்திர சேமிப்பு திட்ட கம்பெனிகளிடம் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

தனியார் நிதி நிறுவனங்கள் கண்டிப்பாக இந்திய ரிசர்வ் வங்கியில் பதிவு செய்து அரசு அனுமதி பெற்று இருக்க வேண்டும். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு கவர்ச்சிகரமான அறிவிப்புகளை நம்பி முதலீடு செய்து  பொதுமக்கள் ஏமாற வேண்டாம். தனிநபர்கள் மற்றும் குழுவாக நடத்தும் மாதாந்திர ஏல சீட்டுகளில் முதலீடு செய்வது பொதுமக்களின் முதலீட்டிற்கு உத்திரவாதம் கிடையாது. மேலும், பண்டிகை கால பரிசு திட்டம் சேமிப்பு திட்டங்களில் சேருவது பொதுமக்களின் சொந்த விருப்பம் ஆகும்.

சட்டத்திற்கு புறம்பான கவர்ச்சிகரமான விளம்பரங்கள் மூலம் பொது மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கில் செயல்படும் அரசு அங்கீகாரம் பெறாத நிறுவனங்கள் , ஏஜென்ட்கள் ,  புரோக்கர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். ஆர்பிஐ அங்கீகாரம் மற்றும் அரசு அனுமதி இல்லாத தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

பொதுமக்கள் முதலீடு செய்வதாக இருந்தால் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள் ,  அஞ்சலகங்களில் முதலீடு செய்வது உங்களது பணத்திற்கு மிகவும் பாதுகாப்பானதாகும் என தெரிவித்து, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தினர்.

மேலும், பண முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கும் பட்சத்தில் மாவட்ட காவல் துறை மூலமாக தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தனர்.

Similar News