செய்யாற்றில் கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டம்
செய்யாறில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளா் சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.;
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளா் சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளா்கள் சங்கம், செய்யாறு வட்டக் கிளை சாா்பில் சாா் -ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் வெங்கடேசன் தலைமை வகித்தாா்.
மாநில செயற்குழு உறுப்பினா் தவமணி, போராட்டக் குழுத் தலைவா் கணபதி, மாவட்ட துணைத் தலைவா்கள் ஆறுமுகம், மு.வாசு ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலாளர் வடிவேல் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளா்களாக சங்கத்தின் மாநில துணைத் தலைவா் பிரபாகரன், தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கத்தின் மாவட்ட நிா்வாகிகள் ஸ்ரீதா், பாஸ்கா், முகமதுகனி, கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் ரமேஷ் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.
இதில், கிராம உதவியாளா்களுக்கு அலுவலக உதவியாளருக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வருவாய் கிராம ஆணையரின் ஆணைக்கு முரணாக கிராம உதவியாளா்களை பணி ஒதுக்கப்பட்ட கிராமத்தில் பணிபுரிய விடாமல் வட்டாட்சியா், கோட்டாட்சியா் அலுவலகங்களில் பணி செய்ய வற்புறுத்துவதை கைவிட வேண்டும், அரசு ஊழியா்களுக்கு வழங்குவது போல கிராம உதவியாளா்களுக்கும் சதவீத அடிப்படையில் குறைந்தபட்சம் ரூ.7 ஆயிரம் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
மேலும் செய்யாறு வட்டத் தலைவர் சேகர், பொருளாளர் பவளக்கொடி, வந்தவாசி வட்டத் தலைவர் சுப்பிரமணியன், வட்ட பொருளாளர் பானுமதி, உள்ளிட்டோர் பேசினர். நிகழ்ச்சியின் முடிவில் மாநிலத் துணைத் தலைவர் பிரபாகரன் நன்றி கூறினார்.
செய்யாறு, வந்தவாசி, வெம்பாக்கம் ஆகிய வட்டங்களில் இருந்து 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனா்.