வியாபாரியை கொலை செய்ய பட்டாக்கத்தியுடன் சுற்றித் திரிந்த கும்பல் கைது
செய்யாறு பகுதியில் வியாபாரியை கொலை செய்ய பட்டாக்கத்தியுடன் சுற்றித்திரிந்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
செய்யாறு பகுதியில் பட்டாக்கத்தியுடன் திரிந்த 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் ஆய்வாளர் ஜீவராஜ் மணிகண்டன், துணை காவல் ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் நேற்று (ஏப்ரல் 21) மாலை ஆற்காடு சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, 2 பைக்குகளில் வந்த 4 பேரையும், பின்னால் வந்த காரையும் நிறுத்தி விசாரித்தனா். காா் மற்றும் பைக்கில் வந்தவா்களும் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனா்.
இதனால், சந்தேகமடைந்த போலீஸாா் 9 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்தனா்.
அதில், நம்பேடு கிராமத்தைச் சேர்ந்த மோகன் தாஸ் என்பவரது சகோதரர் மணிகண்டனுக்கும், அதே கிராமத்தைச் சேர்ந்த வியாபாரி சேட்டு என்பவருக்கும் மரம் ஏலம் எடுப்பதில் தகராறு ஏற்பட்டு ஒருவரையொருவர் சரமாரி தாக்கிக் கொண்டனர்.
இதனால் மோகன்தாஸ், நம்பேடு கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வன் , சுரேஷ் , வினோத் , சென்னை போரூர் பகுதியைச் சேர்ந்த முருகன் உட்பட 9 பேர் வியாபாரி சேட்டு மற்றும் அவரது ஆதரவாளர்களைக் கொலை செய்வதற்காகப் பட்டாக் கத்திகளுடன் சென்றது தெரியவந்தது.
இந்நிலையில் செய்யாறு காவல்துறையினர், மோகன்தாஸ் உட்பட 9 பேரைக் கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 பைக், கார், மற்றும் பட்டாக் கத்திகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
பின்னர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இன்று சிறையில் அடைத்தனர்.
வியாபாரியைக் கொலை செய்யப் பட்டாக்கத்தியுடன் திரிந்த கும்பல் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.