திருமணமான 13 நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு: கோட்டாட்சியர் விசாரணை
திருமணமான 13 நாட்களில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம், வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.;
திருவள்ளுர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை அருகே உள்ள எரும்பி பகுதியை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் கோமதி. பொறியியல் பட்டதாரி. இவருக்கும், திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியை சேர்ந்த கோகுல்கண்ணா என்பவருக்கும் கடந்த ஒன்றாம் தேதி திருமணம் நடைபெற்றது. கோகுல்கண்ணா, ஸ்ரீபெரும்புதுரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், திருமணத்திற்கு பின் மணமகள் வீட்டில் இருந்த புதுமண தம்பதியினர் கடந்த திங்கட்கிழமை காலையில் செய்யாறு திரும்பி உள்ளனர்.
மதியம் கோமதிக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, அவரை உறவினர்கள் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனையில் அவருக்கு இதய அடைப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, கோமதிக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கோமதியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணமான 13 நாட்களில் கோமதி உயிரிழந்ததால் இந்த சம்பவம் குறித்து செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.