பொதுத்தேர்வு எழுத இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவர்கள் விபத்தில் படுகாயம்
செய்யாறு அருகே மோட்டார் சைக்கிளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத 3 மாணவர்கள் விபத்தில் படுகாயமடைந்தனர்.
செய்யாறு அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் 3 மாணவர்கள் காயம்; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியவில்லை
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா பாராசூர் கிராமத்தைச் சேர்ந்த சதாசிவம் என்பவரின் மகன் சதீஷ் (வயது 15), அவரது நண்பர் அபிஷேக் (15). இருவரும் கொருக்கை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகின்றனர். இதேபோல அதே பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் விஜய் (15) பாராசூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
தமிழகத்தில் நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. சதீஷ் உள்பட 3 மாணவர்களும் தேர்வு எழுதுவதற்காக கொருக்கை அரசு மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்துக்கு மோட்டார்சைக்கிளில் சென்றனர். தாண்டுகுளம் என்ற கிராமத்தின் அருகே சென்றபோது மாணவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றிருந்த அதே பகுதியை சேர்ந்த எழில்குமார் (40) என்பவர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவர்கள் உள்பட 4 பேரும் காயமடைந்தனர். லேசான காயமடைந்த அபிஷேக் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு தேர்வு எழுத சென்றான்.
படுகாயமடைந்த சதீஷ், விஜய், எழில்குமார் ஆகிய 3 பேரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. மேலும் மாணவர்கள் மயக்க நிலையில் இருந்ததால் அவர்களால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத முடியவில்லை. இதுகுறித்து செய்யாறு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.