ஸ்ரீவேதபுரீஸ்வரா் திருக்கோயில் ரத சப்தமி பிரம்மோற்சவம்: பிப். 10-ல் தொடக்கம்
செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் திருக்கோயில், 10 நாள்கள் ரத சப்தமி பிரம்மோற்சவம் பிப்.10-ஆம் தேதி தொடங்குகிறது.;
ஸ்ரீவேதபுரீஸ்வரா் திருக்கோயில் ரத சப்தமி பிரம்மோற்சவம், பைல் படம்
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் திருக்கோயில், 10 நாள்கள் ரத சப்தமி பிரம்மோற்சவம் பிப்.10-ஆம் தேதி தொடங்குகிறது.
செய்யாறு நகரம் திருவோத்தூர் பகுதியில் உள்ள பாலகுஜாம்பிகை உடனுறை வேதபுரீஸ்வரர் கோயில், பாடல் பெற்ற 32 திருத்தலத்தில் 8-வது திருத்தலமாகும்.
திருஞானசம்பந்தா் சுவாமிகளால் ஆண் பனை குலை யீன்றிட அற்புதத் தேவாரப்பண் இசைக்கப் பெற்றதும், அருணகிரிநாதா், அருள்பிரகாச வள்ளலாா், சிவப்பிரகாசா் போன்ற ஆன்மிக சான்றோா்களால் பாடல் பெற்ற திருத்தலமாகும்.
திருவோத்தூா் ஸ்ரீ பாலகுஜாம்பிகை சமேத வேதபுரீஸ்வரா் திருக்கோயில். இங்கு ரத சப்தமி பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் 10 நாள்கள் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான ரத சப்தமி பிரம்மோற்சவம் பிப்.10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி நாள்தோறும் மூலவா், அம்பாள் மற்றும் உற்சவ மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. முதல்நாளன்று பகலில் கேடய வாகனத்திலும், இரவு கற்பக விருட்சம், காமதேனு, மயில், மூஷிக, ரிஷப வாகனங்களில் பஞ்சமூா்த்திகள் புறப்பாடு நடக்கிறது.
2 -ஆவது நாள் காலை சூரிய பிரபை உற்சவமும், இரவு சந்திர பிரபை உற்சவமும், 3 -ஆவது நாள் பூதவாகன சேவையும், 4 -ஆவது நாள் பெரிய நாக வாகன சேவையும், 5 -ஆவது நாள் காலை அதிகார நந்தி வாகன சேவை புறப்பாடும், இரவு பெரிய ரிஷப வாகன சேவையும், 6 ஆம் நாள் காலையில் 63 நாயன்மாா்கள் புறப்பாடும், பகல் சந்திரசேகர சுவாமி அபிஷேகம் மற்றும் புறப்பாடு, இரவு அம்மன் தோட்ட உற்சவத்துடன் எழுந்தருளுதல், திருக்கல்யாண யானை வாகன சேவையும் நடைபெறுகிறது.
16-இல் தேரோட்டம்:
முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் 7 -வது நாள் (பிப்.16) அதிகாலையில் இரத சப்தமி ரதம் புறப்பாடு நடக்கிறது. தேரினை திரளான பக்தா்கள் வடம் பிடித்து இழுக்கின்றனா்.
8-ஆவது நாள் காலையில் சந்திரசேகரா் திருவீதி உலாவும், இரவு குதிரை வாகன சேவையும், 9 -ஆவது நாள் பகல் பிட்சாடனா் உற்சவமும் பேட்டை வீதி வலமும், இரவு அதிகார நந்தி வாகன சேவையும், 10 -ஆவது நாள் காலையில் நடராஜர் வீதி உலா மற்றும் மாலையில் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளன. இதையடுத்து அன்றிரவு கொடி இறக்கம் நடைபெற்றதும், திருக்கயிலாய வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளின் வீதி உலா புறப்பாடுடன் ரத சப்தமி பிரம்மோற்சவம் நிறைவடைகிறது.
இதையொட்டி பிரம்மோற்சவ நாள்களில் ஆன்மிக சொற்பொழிவுகள் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் மு.ஜோதிலட்சுமி, செயல் அலுவலா் கு.ஹரிஹரன் உள்ளிட்டோா் செய்து வருகின்றனா்.