அனைத்து ஏடிஎம் மையங்களிலும் இரவு காவலர்களை நியமிக்க செய்யாறு டிஎஸ்பி அறிவுரை
செய்யாறு பகுதியில் உள்ள அனைத்து ஏடிஎம் மையங்களிலும் இரவு காவலர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்று டிஎஸ்பி அறிவுறுத்தி உள்ளார்.;
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் கோட்டத்தில் உள்ள அனைத்து வங்கி அலுவலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு கூட்டம் செய்யாறில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு, காவல் ஆய்வாளர் பாலு முன்னிலை வகித்தார். செய்யாறு டிஎஸ்பி வெங்கடேசன் தலைமை தாங்கி பேசினார்.
கூட்டத்தில் செய்யாறு காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் பேசியதாவது:
வங்கி மற்றும் ஏடிஎம்களில் கண்டிப்பாக காவலர்களை நியமிக்க வேண்டும். முக்கியமாக இரவு நேரங்களில் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும். காவலர்கள் பணிக்கு 60 வயதுக்கு மேற்பட்ட வயதானவர்களை தவிர்க்க வேண்டும்.
அனைத்து வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் கண்டிப்பாக பெயரளவுக்கு இல்லாமல் தரமான சிசிடிவி கேமரா பொருத்தி இருக்க வேண்டும். கேமரா நல்ல நிலையில் இயங்குகிறதா என அடிக்கடி சரி பார்க்க வேண்டும். வங்கி மற்றும் ஏடிஎம் நோக்கியபடி எதிரே வெளியிலிருந்து கண்காணிக்கும் படியும் கேமரா பொருத்த வேண்டும்.
வங்கிக்குள் அடிக்கடி வரும் நபா்கள் சந்தேகப்படும் படியாக தெரிந்தால் காவல் நிலையத்துக்கு தெரிவிக்க வேண்டும். மேலும், நீண்ட நேரம் வங்கிக்குள் அமர்ந்து இருப்பவர்களை கண்காணித்து அவர்களை உடனடியாக வெளியேற்ற வேண்டும். வங்கியில் எச்சரிக்கை அலாரம் கண்டிப்பாக பொருத்தப்பட வேண்டும்.
ஏடிஎம் மையம் மற்றும் வங்கிக்குள் செக்யூரிட்டி அலாரம் அமைத்து அதனை அருகில் உள்ள போலீஸ் நிலையத்துடன் நேரடியாக இணைக்க வேண்டும். ஏடிஎம் மற்றும் வங்கிகள் போலீஸ் நிலையத்துடன் நேரடியாக தொடர்பு கொள்ள வசதியாக நேரடி தொலைபேசி வசதி இணைக்க வேண்டும் என டிஎஸ்பி வெங்கடேசன் அறிவுரை வழங்கினார்.
கூட்டத்தில், செய்யாறு வெம்பாக்கம் தாலுகாவில் உள்ள வங்கி கிளை மேலாளர்கள், ஏடிஎம் காவலாளிகள் என 50-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.