அறிவியல் படைப்பு போட்டி:செய்யாறு அரசுப் பள்ளிக்கு முதல் பரிசு
தனியார் பொறியியல் கல்லூரி நடத்திய போட்டியில் செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.;
செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் 5 மாணவர்கள் ஒரு குழுவாக இணைந்து அறிவியல் ஆசிரியர் செல்வகணபதி வழிகாட்டுதலுடன் சென்னை சாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற அறிவியல் புதுமை படைப்பிற்கான போட்டியில் கலந்து கொண்டனர்.
இதில் 450-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கலந்து கொண்டன. செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் நவீன ஊன்றுகோலை கண்டுபிடித்து காட்சிப்படுத்தி விளக்கம் அளித்தனர்.
இந்த ஊன்றுகோலை பயன்படுத்தும்போது, எதிரிலுள்ள பொருள்களை இதில் பொருத்தப்பட்டுள்ள சென்சாா் கருவி கண்டறிந்து, மாற்றுத் திறனாளிகளுக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஊன்றுகோல் சிறந்த படைப்பாக தோவு செய்யப்பட்ட நிலையில், இதை உருவாக்கிய செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு முதல் பரிசுக்கான ரொக்க பரிசாக ரு.10 ஆயிரம், சான்றிதழை சென்னை வானிலை மைய கூடுதல் இயக்குநா் பாலசந்தா் வழங்கிப் பாராட்டினா்
மாநில அளவிலான அறிவியல் தொழில்நுட்ப கண்டுபிடிப்பில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் உமர்பாரூக், விஷ்ணுபிரசாத், ரூபேஷ்கண்ணன், விஷால், அமிர்தப்பிரியன் மற்றும் அறிவியல் ஆசிரியர் செல்வகணபதி ஆகியோரை தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அசோக், பள்ளி மேலாண்மை வளர்ச்சிக்குழு தலைவர் ரமேஷ், பள்ளி மேலாண்மை குழு தலைவர் உமாமகேஸ்வரி ஆகியோர் பாராட்டினர்.