திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்

திருவண்ணாமலை ,ஆரணி ,செய்யாறு தாலுகாக்களில் மக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்றது

Update: 2023-02-07 03:45 GMT

ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்

திருவண்ணாமலை ஆட்சியர்அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் முருகேஷ் தலைமை வகித்தார். இதில் திருவண்ணாமலை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு வீட்டுமனை பட்டா, கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகள் உபகரணங்கள், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 200-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.

மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கினார். மேலும் அதன் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். தொடர்ந்து கடந்த வாரங்களில் பெற்ற மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

கடந்த வார மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தின் போது 2 பேர் தீக்குளிக்க முயற்சி செய்தனர். அதனைத்தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. காவல்துறையினர்  தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மனு அளிக்க வந்த பொதுமக்களை, சோதனை செய்த பின்னரே கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் செல்ல அனுமதித்தனர்.

செய்யாறு

செய்யாறு சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான பொதுமக்கள் குறைதீா் கூட்டம் சாா் -ஆட்சியா் அனாமிகா தலைமையில் நடைபெற்றது.

சேத்துப்பட்டு, வந்தவாசி, வெம்பாக்கம், செய்யாறு ஆகிய வட்டங்களில் இருந்து பட்டா மாற்றம் செய்து கோரியும், ஆக்கிரமிப்புகள் அகற்றக் கோரியும்,, நிலம் திருத்தம் கோரியும், நிலம் மற்றும் வீட்டுமனை அளவீடு செய்யக் கோரியும், அரசு வேலை வழங்கக் கோரி கோரியும், , முதியோா் உதவித்தொகை கோரியும்,, பெயா் திருத்தம் கோரியும்,, பட்டா ரத்து, இலவச வீடு கோரியும்,, இதர துறை மனுக்கள் உள்பட மொத்தம் 66 மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தன.

கூட்டத்தில் வருவாய்த் துறை மற்றும் இதர துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ஆரணி

ஆரணி வருவாய்க் கோட்டாசியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தின் போது, மட்டதாரி கிராம மக்கள் மனைப் பட்டா கோரி அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

குறைதீா் கூட்டம் கோட்டாட்சியா் தனலட்சுமி தலைமையில் நடைபெற்றதில்,  உதவியாளா் பெருமாள் மற்றும் பிற துறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து, கோட்டாட்சியா் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று விசாரணை நடத்தினாா்.

அப்போது, தமிழ்நாடு ஊராட்சிமன்றத் தலைவா்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளா் அளித்த மனுவில், ஆரணி அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் சிகிச்சைக்காக வருகின்றனா். அவா்களுக்குத் தேவையான குடிநீா், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும்.

ஆரணி கமண்டல நாகநதிக் கரை மயானத்துக்கு சடலங்களை வாகனத்தில் எடுத்துச் சென்று, ஆற்று மேம்பாலம் அருகே இறுதிச் சடங்கு நடத்தும் போது அவ்வழியாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அதனால், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க நகராட்சி நிா்வாகம் மாற்று ஏற்பாடு செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தாா்.

மேலும், ஆரணி ஊராட்சி ஒன்றியம், மட்டதாரி ஊராட்சிக்கு உள்பட்ட மைனந்தல் ஆதிதிராவிடா் குடியிருப்பு பகுதியில் மயானத்துக்கு செல்லும் பாதை ஆக்கிரமிப்பில் உள்ளது என்றும் தெரிவித்திருந்தாா். தொடா்ந்து, கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 148 மனுக்கள் அளிக்கப்பட்டன. முன்னதாக, ஆரணியை அடுத்த மட்டதாரி கிராம மக்கள் வீட்டுமனைப் பட்டா கோரி, கோட்டாட்சியா் அலுவலகம் முன் முற்றுகைப்  போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கூட்டத்தில் அரசுத் துறை அதிகாரிகள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News