மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கல்
ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடியை வட்டார கல்வி அலுவலர் வழங்கினார்.;
மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடி வழங்கிய வட்டார கல்வி அலுவலர்
திருவண்ணாமலை மாவட்டம் நரியாப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு இலவச கண் கண்ணாடியை வட்டார கல்வி அலுவலர் முருகன் வழங்கினார். திருவண்ணாமலை ஒன்றியம் நரியாப்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதலமைச்சரின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டம் மூலம் இலவச கண் கண்ணாடி வழங்கும் விழா தி.மலை வட்டாரக் கல்வி அலுவலர் முருகன் தலைமையில் நடைபெற்றது.
பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் வளர்மதி, துணை தலைவர் சுமதி ஆகியோர் முன்னிலை வகிக்க, பள்ளி தலைமை ஆசிரியர் வெ.சரவணன் அனைவரையும் வரவேற்றார்.
காட்டாம்பூண்டி அரசு மருத்துவமனை கண் பரிசோதகர் ரமேஷ் ராய் கலந்து கொண்டு பள்ளி மாணவர்களுக்கு இலவச கண் பரிசோதனை செய்தார். அனைத் தொடர்ந்து வட்டாரக் கல்வி அலுவலர் முருகன் பள்ளி மாணவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கினார். அப்போது பெற்றோர்கள் மாணவர்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்ததோடு, அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தினமும் கண் கண்ணாடி பயன்படுத்தி கண்ணை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நல்லதை நினைப்போம்! நல்லதை செய்வோம்! நல்லதைகேட்போம்! என்று அனைவராலும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதில் ஆசிரியா்கள் ஆனந்தகுமார், பழனிமுருகன், சாந்தி,மணிமேகலை, கலா, மற்றும் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் ஆனந்தகுமார் நன்றி கூறினார்.
பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
திருவண்ணாமலை மாவட்டம் ,வெம்பாக்கம் வட்டம், பெருங்கட்டூா் ஊா்புற நூலகத்தில் 10, பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, ஒன்றியக் குழு உறுப்பினா் சத்யாபக்தன் தலைமை வகித்தாா். முதுநிலை ஆசிரியா் மு.சந்தானம், பட்டதாரி ஆசிரியா் நடராஜன், உடற்கல்வி ஆசிரியா் தீபா வினோதினி, தமிழ்ச்செல்வி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பெரூங்கட்டூா் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பிடித்த யுவஸ்ரீ, டோமேசன் ஆகியோருக்கு தலா ரூ.5 ஆயிரமும், வித்தியப்பிரியா, யுவராஜன் ஆகியோருக்கு தலா ரூ.3 ஆயிரமும், மோகனப்பிரியா, உதயகதிரவன் ஆகியோருக்கு தலா ரூ.2 ஆயிரமும், புத்தகமும் பரிசாக வழங்கப்பட்டது.
இதேபோல, 10-ஆம் வகுப்பு தோ்வில் சிறப்பிடம் பிடித்த புனிதவதி, தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு தலா ரூ.3 ஆயிரமும், ஹேமலதா, விஷ்ணு ஆகியோருக்கு தலா ரூ.2 ஆயிரமும், யுவஸ்ரீ, ரகுநாத் ஆகியோருக்கு தலா ரூ.ஆயிரம், புத்தகத்தை பெருங்கட்டூா் கிராம நிா்வாக அலுவலா் பழனி தனது சொந்த செலவில் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாணவ, மாணவிகளின் பெற்றோா்கள், நூலக வாசகா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முடிவில், நூலகா் தமீம் நன்றி கூறினாா்.