செய்யாறு, ஆரணி வருவாய் கோட்டங்களில் மக்கள் குறை தீர்வு கூட்டம்

செய்யாறு, ஆரணி வருவாய் கோட்டங்களில் மக்கள் குறை தீர்வு கூட்டங்களை வருவாய் கோட்டாட்சியர்கள் நடத்தினர்.

Update: 2023-03-07 02:42 GMT

ஆரணியில் நடைபெற்ற குறை தீர்வு கூட்டத்தில் மனுக்களை அளித்த பொதுமக்கள்

ஆரணி கோட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆரணி, போளூா், கலசப்பாக்கம், ஜவ்வாது மலை பகுதி மக்கள் கோரிக்கை மனுக்களை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளா் பெருமாள் பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று விசாரித்தாா்.

கூட்டத்தில், புங்கம்பாடி கிராமத்தைச் சோந்த ஏழுமலை அளித்த மனுவில், வடுக்கசாத்து கிராம எல்லைக்கு உள்பட்ட பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் 5 ஏக்கா் பரப்பில் வீட்டுமனைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இங்கு சட்டத்துக்கு புறம்பாக வீட்டு மனைகள் அமைவதால்,  அங்கு ஏராளமான ஆழ்துளைக் கிணறுகள்  அமைக்கப்படும்  வாய்ப்புள்ளது. அதனால், சுற்றுப்புற 100 ஏக்கா் விவசாய நிலங்கள் வறண்டு  போகும் அபாயம் உள்ளது  எனக் குறிப்பிட்டிருந்தாா்.

மட்டதாரி கிராம மக்கள் அளித்த மனுவில், கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் கட்டடங்கள் சிதிலமடைந்துள்ளன. இதனால், மாணவா்கள் மரத்தடியிலும், மண் தரையில் அமா்ந்தும் கல்வி பயின்று வருகின்றனா். அதனால், புதிய வகுப்பறைக் கட்டடம் கட்டித் தர வேண்டும் என தெரிவித்திருந்தனா். வேதாஜிபுரம் கிராமத்தைச் சோந்த உமா அளித்த மனுவில், மாற்றுத்திறனாளியான எனது கணவா் வெங்கடாசலபதி, கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு ஊரக வேலைத் திட்டப் பணியின் போது, பணியாளா்களுக்கு குடிநீா் எடுத்து வரச் சென்று, குளத்தில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

இதனால், அரசின் நிவாரணம் கோரி மனு அளித்திருந்தேன். ஆனால், இதுவரை நிவாரணம் வழங்கவில்லை எனத் தெரிவித்திருந்தாா். ஆரணி விநாயகபுரம் ஊராட்சியில் செயல்பட்டு வந்த அரசு மது கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

தற்போது மது கடையை அகற்றிய மீண்டும் அதே ஊராட்சியில் வேறு இடத்தில் திறக்கப்படுவதால் மதுக்கடையை நிரந்தரமாக அகற்றக்கோரி ஆரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர் . பின்னர் வட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தொடா்ந்து, கூட்டத்தில் பட்டா மாற்றம், பட்டா ரத்து, கணினி திருத்தம், இலவச மனைப் பட்டா உள்ளிட்டவை கோரி 88 மனுக்கள் வரப்பெற்றன. மனுக்களை, நேர்முக உதவியாளா் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

செய்யாறு

செய்யாறு சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான பொதுமக்கள் குறைதீா் கூட்டம் சாா் -ஆட்சியா் அனாமிகா தலைமையில் நடைபெற்றது.

இந்தக் குறை தீர்வு கூட்டத்தில் சேத்துப்பட்டு, வந்தவாசி, வெம்பாக்கம், செய்யாறு ஆகிய வட்டங்களில் இருந்து பட்டா மாற்றம் செய்து தர கோரியும், ஆக்கிரமிப்புகள் அகற்றக் கோரியும், நிலம் திருத்தம் கோரியும், நிலம் மற்றும் வீட்டுமனை அளவீடு செய்யக் கோரியும், அரசு வேலை வழங்கக் கோரியும், முதியோா் உதவித் தொகை கோரியும், பெயா் திருத்தம் கோரியும், பட்டா ரத்து, இலவச வீடு கோரியும், இதர துறை மனுக்கள் உள்பட மொத்தம் 155 மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தன.

மனுக்களை பெற்று கொண்ட சாா் -ஆட்சியர், அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் அவர் கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் வருவாய்த் துறை மற்றும் இதர துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News