திருவண்ணாமலை மாவட்டத்தில் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, செய்யாறில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.;
பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்ட ஆரணி ஆர்டிஓ.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, செய்யாறில் நடந்த மக்கள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.
செய்யாறு சார்-ஆட்சியா் அலுவலகத்தில் கோட்ட அளவிலான பொதுமக்கள் குறைதீா் கூட்டம் சார்-ஆட்சியா் அனாமிகா தலைமையில் நடைபெற்றது.
இதில், சேத்துப்பட்டு, வந்தவாசி, வெம்பாக்கம், செய்யாறு ஆகிய வட்டங்களில் இருந்து பட்டா மாற்றம் செய்து தர கோரியும், ஆக்கிரமிப்புகள் அகற்றக் கோரியும், நிலம் திருத்தம் கோரியும், நிலம் மற்றும் வீட்டுமனை அளவீடு செய்யக் கோரியும், அரசு வேலை வழங்கக் கோரியும், முதியோா் உதவித்தொகை, பெயா் திருத்தம், பட்டா ரத்து, இலவச வீடு, இதர துறை மனுக்கள் உள்பட மொத்தம் 58 மனுக்கள் அளிக்கப்பட்டன.
மனுக்களை பெற்று கொண்ட சார் ஆட்சியர், அதனை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். மேலும் அவர் கடந்த வாரங்களில் பெறப்பட்ட மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் குறித்தும் அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார். கூட்டத்தில் வருவாய்த் துறை மற்றும் இதர துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.
ஆரணி
ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வாரந்திர மக்கள் குறைத்தீர்வு கூட்டம் ஆர்டிஓ தனலட்சுமி தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், நேர்முக உதவியாளர் குமாரவேலு மற்றும் பிறதுறை அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து, 81 கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடமிருந்து ஆர்டிஒ தனலட்சுமி பெற்று விசாரித்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்
அப்போது, படவேடு ஊராட்சிக்குட்பட்ட மல்லிகாபுரம், கமண்டலாபுரம் ஆகிய கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: மேற்கண்ட கிராமங்களில் 350-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். ஜமுனாமரத்தூர் தாலுக்கா கானமலை ஊராட்சிக்குட்பட்ட எல்லந்தம்பட்டு கிராமத்தில் உண்ணாமலை என்பவர் கள்ளச்சாராயம் விற்கிறார்.
இதுகுறித்து, கிராமமக்கள் காவல்துறையிடம் தகவல் தெரிவித்தால், உண்ணாமலையின் மகன் சாமிநாதன் ஆரணி நகர காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருவதால், என்னை ஒன்றும் செய்ய முடியாது, மீறி புகார் அளிப்பவர்களை ஒழித்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். எனவே, உண்ணாமலை, சாமிநாதன் மீது துறை ரீதியான நடவடிக்கை கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவித்தனர். இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க ஆர்டிஓ உத்தரவிட்டார்.