தீபாவளி பொருட்கள் கிடைக்காத விரக்தியில் சிட்பண்ட் நிறுவனத்தை சூறையாடிய பொதுமக்கள்!
செய்யாற்றில் தீபாவளி பொருட்கள் கிடைக்காததால், சிட்பண்ட் நிறுவனம், ஹோட்டல், கடை ஆகியவற்றை பொதுமக்கள் சூறையாடினா்.
செய்யாற்றில் தீபாவளி சிட் பண்ட் பொருள்கள் கிடைக்க காலதாமதம் ஏற்பட்டதால், அந்த தனியாா் சிட்பண்ட் நிறுவனத்தின் அலுவலகம், மளிகைக் கடை, உணவகம் ஆகியவற்றை மா்ம நபா்கள் சூறையாடினா்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு புதிய காஞ்சிபுரம் சாலையில் தனியாா் சிட் பண்ட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனம் சாா்பில் தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு ஆகிய பண்டிகைகளை முன் வைத்து, கவா்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து முகவா்கள் மூலம் சிட்பண்டுகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் வேலூா், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூா், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து பல லட்சம் பேர் கோடிக்கணக்கில் பணம் செலுத்தி வந்ததாகத் தெரிகிறது.
இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்கிய சூழ்நிலையில் பட்டாசு, மளிகை பொருட்கள், பரிசு பொருட்கள் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு கிடைக்காது என்ற நிலையில் அவ்வப்போது மக்கள் முறையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று செய்யாறு காஞ்சிபுரம் சாலையில் இயங்கி வரும் தலைமை அலுவலகம் மற்றும் கடையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீரென புகுந்து அலுவலகத்தில் இருந்த பொருட்களை. சூறையாடி சென்றுள்ளதாகவும், அலுவலகத்திற்குள் இருந்த சோபா, ஏசி, பீரோ, மின்விசிறி, அலமாரிகள், நாற்காலிகள், டிவி மற்றும் கிடைத்த பொருட்களை அள்ளிக் கொண்டு சென்றதாகவும் பொருட்கள் சிலவற்றை அடித்து நொறுக்கியதாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் அலுவலகம் அருகில் இருந்த மளிகை கடைகளில் மளிகை பொருட்கள் அடங்கிய மூட்டைகள் மற்றும் இதர இரும்பு பொருட்களையும் எடுத்துச் சென்றதாகவும் தெரிகிறது. மேலும் சில பொருட்களை எடுத்துச் செல்ல முடியாததால் நடுரோட்டில் வீசிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து செய்யாறு போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் வருவதை அறிந்த மா்ம நபா்கள் சூறையாடிய பொருள்களை எடுத்துச் செல்ல முடியாமல் சாலையில் வைத்துச் சென்றனா்.
மேலும், இந்த நிறுவனத்துக்குச் சொந்தமான உணவகங்களில் இருந்த சமையல் பொருள்கள், 20 எரிவாயு உருளைகள், பாத்திரங்களை அந்த நபா்கள் எடுத்துச் சென்றனா்.
இந்நிறுவனத்தின் உரிமையாளர் என்று கூறப்படும் அல்தாப் என்பவருக்கு சொந்தமான வீடு காந்தி சாலை பகுதியில் உள்ளது. அங்கேயும் ஒரு கும்பல் சென்று சூழ்ந்துகொள்ள போலீசார் வருவதைக் கண்டு அங்கிருந்து தப்பி ஓடி உள்ளனர்.
ஆற்காடு சாலையில் குடோன்கள் உள்ளன அந்த குடோனில் போலீசார் தற்போது பாதுகாப்பு பணியில் உள்ளனர் தனியார் நிதி நிறுவன தலைமை அலுவலகம் மளிகை கடை ஓட்டல் போன்ற இடங்களில் மர்ம கும்பல் சூறை ஆடினார்களா அல்லது யாரேனும் திட்டம் தீட்டி இதை பயன்படுத்திக் கொண்டார்களா பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் ஏஜென்ட்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்று பல கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
புதிய காஞ்சிபுரம் சாலையில் சிட்பண்டில் பணம் செலுத்தியவா்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். அப்போது அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா், பாதிக்கப்பட்டவா்கள் இதுகுறித்து புகாா் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.
இதையடுத்து, மறியலில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா். இந்தச் சம்பவங்களால் செய்யாறு பகுதி பரபரப்பாக காணப்பட்டது.