செய்யாறு அருகே கோவில் பூட்டை உடைத்து பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை திருட்டு
செய்யாறு அருகே கோவில் பூட்டை உடைத்து ஐம்பொன் சிலையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்யாறு தாலுகா அத்தி கிராமத்தில் சுப்பிரமணியர் கோவிலும் உட்பிரகாரத்தில் ஆஞ்சநேயர் சன்னதியும் உள்ளது. இந்த நிலையில் சுப்பிரமணியர் கோவில் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் ஆஞ்சநேயர் சன்னதியின் பூட்டை உடைத்து சுமார் இரண்டரை அடி உயரத்தில் நிறுவப்பட்டிருந்த ஐம்பொன்னாலான பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை திருடி சென்றுள்ளனர். 30 கிலோ எடை கொண்ட சிலையின் மதிப்பு ரூ.50 ஆயிரம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த செய்யாறு துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
விசாரணையில் நள்ளிரவில் கோவிலின் சுற்று சுவர் மீது ஏறி உள்ளே குதித்த மர்ம நபர்கள் சிலையை பெயர்த்து எடுத்து கோவிலின் வெளியே போட்டுவிட்டு மீண்டும் சுவர் ஏறி வெளியே குதித்து சிலையை திருடிச் சென்றிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து அனக்காவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.