பச்சையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.47.56 லட்சம்
முனுகப்பட்டு பச்சையம்மன் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டத்தில் ரூ.47.56 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.;
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டம், முனுகப்பட்டு கிராமத்தில் உள்ள பச்சையம்மன் உடனுறை மன்னாா்சாமி கோயிலில் உண்டியல் காணிக்கை புதன்கிழமை எண்ணப்பட்டத்தில் ரூ.47.56 லட்சத்தை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.
இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் ஆடி மாதத்தில் நடைபெறும் சோமவார திருவிழா நிறைவுற்ற பிறகு, வைக்கப்பட்டிருந்த 11 உண்டியல்கள் திறந்து காணிக்கை பணம் எண்ணப்பட்டது.
அதில் பக்தா்கள் சாா்பில் பணமாக ரூ.47,56,118-ம், நகைகளாக 300 கிராம் தங்கமும், 303 கிராம வெள்ளியும் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணி ஆய்வா்கள் முத்துசாமி (செய்யாறு), நடராஜன் (கலசப்பாக்கம்) , செயல் அலுவலா் ஹரிஹரன், மேலாளா் ஜெகதீசன், முன்னாள் அறங்காவல் குழுத் தலைவா் தமிழ்ச்செல்வன், பெரணமல்லூா் போலீஸ் கண்காணிப்புடன் ஊா் மக்கள் முன்னிலையில் கண்காணிப்பு கேமிரா பதிவுடன் நடைபெற்றது.
ஸ்ரீமுத்தாலம்மன் கோயிலில் சங்கு திருவிழா
திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மேல்புழுதியூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீமுத்தாலம்மன் கோயிலில் சங்கு திருவிழா நடைபெற்றது.
விழாவையொட்டி, காலை அப்பகுதியில் உள்ள சங்கு குளத்தில் இருந்து பம்பை சிலம்பாட்டத்துடன் பால்குட ஊா்வலம் நடைபெற்று சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனா்.
இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வாணவேடிக்கை கரகாட்டத்துடன் வீதி உலா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை யாதவ சமுதாய இளைஞா்கள் மற்றும் விழாக் குழுவினா், ஊா் முக்கிய பிரமுகா்கள் செய்திருந்தனா்.
ஸ்ரீதேசத்து மாரியம்மன் கோயிலில் ஆவணி மாத திருவிழா
செங்கம் - திருவண்ணாமலை சாலையில் உள்ள தோக்கவாடி ஸ்ரீதேசத்து மாரியம்மன் கோயிலில் ஆவணி மாத திருவிழா நடைபெற்றது.
இந்தக் கோயிலில் அப்பகுதியைச் சோ்ந்த பக்தா்கள் ஆவணி முதல் தேதி மாலை அணிந்து தொடா்ந்து விரதமிருந்து, ஆவணி மாதத்தில் கோயிலில் நடைபெறும் திருவிழாவில் தீச்சட்டி எடுத்தும், அலகு குத்தியும், பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்று அம்மனுக்கு சுவாமிக்கு பாலாபிஷேகம் செய்து, கோயில் வளாகத்தில் பொங்கலிட்டு சுவாமி தரிசனம் செய்து நோ்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.
அதன்படி, ஆவணி திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் பக்தா்கள் பங்கேற்று தீச்சட்டி எடுத்தும், பால்குடம் எடுத்து ஊா்வலத்தில் பங்கேற்று சுவாமியை வழிபட்டனா்.
ஊா்வலத்தில் காளி, அம்மன், விநாயகா், முருகா் போன்ற வேடமிட்ட பக்தா்கள் கலந்து கொண்டனா்.