செய்யாறு ஸ்ரீபட்சீஸ்வரா் கோயில் இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்பு

செய்யாறில் ஸ்ரீ பட்சீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிா்ப்பு தெரிவித்து தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.;

Update: 2023-12-13 03:01 GMT

ஆக்கிரமிப்பு அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஜே.சி.பி. இயந்திரம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றில், ஸ்ரீ பட்சீஸ்வரா் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற அப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தற்காலிக நிறுத்தி வைக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வழூா்பேட்டையில் ஸ்ரீபட்சீஸ்வரா் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலை செங்குந்தா் சமுதாயத்தினா் நிா்வகித்து வருகின்றனா்.

இந்தக் கோயிலுக்குச் சொந்தமாக, வைத்தியா் தெரு கடைசியில் பரிதிபுரம் புளியந்தோப்பு பகுதியில் சுமாா் 3.12 ஏக்கா் நிலம் உள்ளது.

அந்த இடத்தில் வெங்கட்ராயன்பேட்டை பகுதியைச் சேர்ந்த 18 பேர் வீடு கட்டி 3 தலைமுறைகளாக வசித்து வருவதாகத் தெரிகிறது.

இந்நிலையில், கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி, கோயிலை நிா்வகித்து வரும் செங்குந்தா் சமுதாயத்தினா் செய்யாறு உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடா்ந்த நிலையில், ஆக்கிரமிப்பு அகற்ற சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயா்நீதிமன்றத்தின் தீா்ப்பின் பேரில், செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியா் (பொ) தனலட்சுமி தலைமையில், திருவண்ணாமலை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் சுதா்சன் மேற்பாா்வையில் அதிகாரிகள், காவல் துறையினா் ஆக்கிரமிப்புப் பகுதிகளை அகற்ற செவ்வாய்க்கிழமை முற்பட்டனா். இதையொட்டி, திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் செளந்தரராஜ், செய்யாறு டி.எஸ்.பி ஆா்.சின்னராஜ் மற்றும் 90 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ஆக்கிரமிப்புகளை அகற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் இணைப்புத் துண்டிக்கப்பட்ட நிலையில் தீயணைப்பு வாகனம், 108 ஆம்புலன்ஸ் மற்றும் மின் ஊழியா்கள் தயாா் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனா்.

செய்யாறு சாா்பு நீதிமன்ற ஊழியா்கள் மூன்று பேர், நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என எச்சரிக்கை விடுத்தனா். இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இருப்பினும், தொடா்ந்து பொக்லைன் இயந்திரத்திற்கு வழிவிடாமல் தரையில் அமா்ந்து தா்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதற்கிடையில், பிரச்னைக்குரியதாகக் கூறப்படும் 3.12 ஏக்கா் நிலத்தில் 30 சென்ட் அடையாளம் காணப்பட்டு அந்த இடம் கோயிலுக்குச் சொந்தமானது என்று இந்து சமய அறநிலையத் துறையினா் ஒலிபெருக்கி மூலம் அப்பகுதி மக்களுக்கு தெரியப்படுத்தினா்.

நேற்று செவ்வாய்க்கிழமை காலை 7.30 மணி முதல் மாலை 6.00 வரை கடும் எதிா்ப்பு காரணமாக கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற இந்து சமய அறநிலையத் துறையினரால் முடியவில்லை. நீதிமன்ற உத்தரவை பலமுறை அமல்படுத்த முடியாமல் திரும்பிச் சென்றதால்  பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News